கிராமம் சார்ந்த கதைக்களத்தை எப்போதும் கையில் எடுப்பவர் இயக்குனர் முத்தையா. இவருக்கு குட்டி புலி திரைப்படம் தான் முதல் படமாக அமைந்தது. சசிகுமாரை வைத்து இயக்கிய அந்த திரைப்படம், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. பிறகு கார்த்தியை வைத்து கொம்பன் திரைப்படத்தை இயக்கினார் முத்தையா.
இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. மாமன் – மருமகனுக்கு இடையேயான உறவை காட்டியிருந்த முத்தையா, மசாலா காட்சிகளுக்கு நல்ல ஸ்கோப் கொடுத்திருந்தார். கார்த்தியும் தனக்கு உண்டான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார். இதன் காரணமாக கொம்பனின் வெற்றி சொல்லி அடித்தது.
இதன் பிறகு, முத்தையாவுக்கு பெரிய வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை. விஷால் நடித்த மருது திரைப்படம் சொல்லிக் கொள்ளும் வகையில் இருந்தது. மற்றபடி எந்த திரைப்படங்களும் ரசிகர்கள் மனதை கவர்வதில்லை. அதிலும் அவர் கடைசியாக எடுத்த படங்கள் திரையரங்குகளை விட்டு வேகமாக ஓடின.
கார்த்தியை வைத்து அவர் எடுத்த விருமன், ஆர்யாவை வைத்து அவர் எடுத்த காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் என இரண்டு திரைப்படமும் தோல்வியடைந்தது. அதுமட்டுமல்ல முத்தையா மீது விமர்சனங்களும் எழுந்தன. எப்போதும் அரைத்த மாவையே முத்தையா அரைப்பதாகவும், புதிதாக அதில் ஒன்றுமே இல்லை என்றும் பலரும் கூறி வந்தனர்.
குறிப்பாக அவரது திரைப்படத்தில் கதாநாயகன் படித்து முன்னேறுவது போன்ற காட்சிகள் இடம் பெறவே செய்யாது என்றும், எப்போதும் அடிதடியை மட்டுமே அவர் விரும்புவது போன்ற சீன்கள் இடம்பெற்றிருக்கும் என்றும் கூறி வந்தனர். இப்படியான சூழலில் தனது அடுத்த திரைப்படத்தில் தனது மகனை வைத்து எடுத்து முடித்திருக்கிறார் முத்தையா. இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இது போக அருள்நிதியை வைத்தும் புதிய திரைப்படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். கருப்பன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த தன்யா தான் இந்த படத்தின் கதாநாயகி. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் அருள்நிதிக்கு குத்துச்சண்டை வீரர் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறாராம் முத்தையா. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் ஒரு வழியாக அவர் வேட்டி கட்டு கலாச்சாரத்திற்கு விடை கொடுத்து விட்டார் என்று கூறிவிடுகின்றனர்.





