தமிழ் சினிமாவில் 1980 – 90களில் பல படங்களில் நடித்தவர் அருண் பாண்டியன். ஹீரோவுக்கு உரிய உடல் அமைப்பும் கம்பீரமான தோற்றமும் கொண்டவர். அவர் பெரும்பாலும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் அவரே தான் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. பல படங்களில் நாயகனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.
சிதம்பர ரகசியம் கோட்டை வாசல் அசுரன் ராஜமுத்திரை தாயகம் தேவன் ஊமை விழிகள் இணைந்த கைகள் போன்ற பல படங்களில் நடிகர் அருண் பாண்டியன் நடித்திருக்கிறார். நடிகர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர். அதனால் தேமுதிக கட்சியில் எம்எல்ஏவாகவும் அருண்பாண்டியன் ஒருமுறை இருந்தார். அது 2011 முதல் 2016ம் ஆணடு காலகட்டமாகும்.
தமிழ் சினிமாவில் அதிக படங்களில் அருண்பாண்டியன் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்களிடம் நல்ல ஒரு அங்கீகாரம் அடையாளம் அவருக்கு இதுவரை இருந்து வருகிறது. கடந்த ஆண்டில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான டிமாண்டி காலனி 2 படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் அருண் பாண்டியன் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.
அருண்பாண்டியனின் அண்ணன் மகள்தான் ரம்யா பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது. ரம்யா பாண்டியனின் கணவர் நடிகர் அசோக் செல்வன். எனவே அருண்பாண்டியனுக்கு நடிகர் அசோக் செல்வன் மருமகன் ஆகிறார்.
சினிமா நடிகர் தயாரிப்பாளர் அரசியல்வாதி என்ற பன்முக தன்மை கொண்ட ஒருவர்தான் அருண்பாண்டியன்.
செந்தூரப்பூவே காவியத்தலைவன் தேவன் விகடன் ஏகன் சர்வம் பேராண்மை வில்லு அங்காடித்தெரு நந்தலாலா முரட்டுக்காளை சவாலே சமாளி களவாடிய பொழுதுகள் ஜூங்கா அன்புக்கினியாள் ஆகிய படங்களின் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சக்க போடு போடு ராஜா வேலைக்காரன் மாயவன் சர்கார் விசுவாசம் ரோமியோ ஆகிய படங்களில் விநியோகஸ்தராகவும் அவர் இருந்திருக்கிறார்
மேலும் ஊழியன் படத்தின் திரைக்கதை எழுத்தாளர் அருண்பாண்டியன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷூக்கு சொந்தமான வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் சிஇஓவாக சமீபத்தில் அருண்பாண்டியன் பொறுப்பேற்றுள்ளார். அவரது மூத்த மகளும் இதே நிறுவனத்தில் பணிசெய்கிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் இளைய மகள் சுஷ்மிதா நிர்வகித்து வருகிறார்.





