நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கி இருக்கிறார். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் கட்சி பெயரை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவு இல்லை என்று விஜய், முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தி விட்டார்.
அதனால் இனி 2026ம் ஆண்டில் வரும் தமிழக சட்டசபை தேர்தல்தான் எங்கள் இலக்கு. எப்படியும் முதல்வர் நாற்காலியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்போடு, தனது ரசிகர் படையுடன் களத்தில் இறங்கியிருக்கிறார் நடிகர் விஜய். மீண்டும் ஆட்சியை தக்க வைத்து விடலாம் என்று நினைத்த ஸ்டாலினுக்கும், மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று ஆசைப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கும், விஜய் வருகை பேரதிர்ச்சியை தந்திருக்கிறது.
தமிழக அரசியலை பொருத்தவரை விஜய்க்கு இது புதிதுதான் என்றாலும், சினிமா களத்தில் விஜய் புகுந்து விளையாடியவர். அவர் அப்பா எஸ்ஏ சந்திரசேகர், டைரக்டர் என்பதால் சின்ன வயதில் இருந்தே நடிகர்கள், நடிகைகள், ஷூட்டிங் ஸ்பாட் என்று பார்த்து பழகியவர். சிறுவனாக இருக்கும்போதே நடிப்பது என்ற முடிவுக்கு வந்தவர். அதனால் நடிகரானார்.
துவக்கத்தில் விஜய் தடுமாறினாலும் ஒரு கட்டத்துக்கு நல்ல இயக்குநர்கள், நல்ல கதைகள் மூலம் விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தனர். காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், குஷி போன்ற படங்களால் முன்னணி நாயகனாக உருவானார் விஜய். அதன்பிறகு ஆக்ஷன் ஹீரோவாகவும் மாறினார்.
லியோ படத்துக்கு பிறகு கோட் படத்தில் நடித்து வரும் விஜய், இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு, தனது சினிமா கூடாரத்தை காலி செய்ய உள்ளார். விஜய் நம்பர் ஒன் பொசிஷனை விட்டு வெளியேறுவது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், களத்தில் இருக்கும் மற்ற நடிகர்களுக்கு இது மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
சினிமா, அரசியல், பொதுவாழ்க்கை என எல்லா இடங்களிலும், அண்ணன் எப்போ போவான், திண்ணை எப்போது காலியாகும் என்ற நிலைதான் இருக்கிறது. அதன்படி நடிகர் விஜய் இடத்தை பிடிக்க நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, சிலம்பரசன், தனுஷ் மற்றும் சிவகரர்த்திகேயன் என ஐந்து பேருக்குள் போட்டி நடந்து வருகிறது. ஐந்து பேரும் முண்டியடித்துக்கொண்டு விஜய் இடத்துக்கு வர போராடுகின்றனர். ஆனால் இதில் யாருமே ஜெயிக்கப் போவது இல்லை. ஏனெனில், விஜய்க்கு கிடைத்த மாஸ், அவராக சேர்த்தது. இதை போட்டியிடும் நடிகர்கள் புரிந்துக்கொள்வார்களா, என்பதுதான் கேள்வி.





