தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் மிக முக்கியமானவர் அசோக் செல்வன். தொடர்ந்து நல்ல கதைகளை நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். யதார்த்தமாகவும் அதே நேரத்தில் கதாபாத்திரத்தில் அழுத்தமாகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
சூது கவ்வும் தெகிடி ஓ மை கடவுளே போர்த்தொழில் ப்ளு ஸ்டார் நித்தம் ஒரு வானம் கூட்டத்தில் ஒருத்தன் சவாலே சமாளி 144 சபாநாயகன் எமக்கு தொழில் ரொமான்ஸ் என அவர் நடித்த படங்கள் எல்லாமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான கதையம்சத்தில் உருவான படங்களாக இருந்தன. இதில் அசோக் செல்வனின் கேரக்டரும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இதில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் சரத்குமார் நிகிலா விமல் தேனப்பன் சரத்பாபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான போர்த்தொழில் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. க்ரைம் திரில்லர் படமான இதில் பெண்கள் கொடூரமாக கொல்லப்படும் நிலையில் அந்த சீரியல் கில்லரை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரிகளாக அசோக் செல்வன், சரத்குமார் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் பல காட்சிகள் எதிர்பாராத திருப்பங்களுடன் மிக அற்புதமான திரைக்கதையில் உருவாக்கப்பட்டு இருந்தது. கன்னத்தில் குழிவிழும் பெண்களை தேர்வு செய்து கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் கையில் கடைசியில் கதாநாயகி நிகிலா விமலும் சிக்கி கொள்வது ரசிகர்களை வேற லெவலில் திகிலடைய வைத்தது.
போர்த்தொழில் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு மீண்டும் இப்போது விக்னேஷ் ராஜா எழுதிய கதையில் அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கார்த்திக் என்பவர் அந்த புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்க வேண்டிய சூழலில் அவர் நடிகர் தனுஷ் படத்தை இயக்க உள்ளதால், இதை அவரது உதவி இயக்குனர் டைரக்ட் செய்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி மூணாறு பகுதியில் சில நாட்கள் ஷூட்டிங் நடந்து முடிந்திருக்கிறது. இந்த படத்தை நடிகர் அசோக் செல்வனின் அக்கா தயாரிக்கிறார். அசோக் செல்வன் நடிக்கும் படங்களின் கதைகளை தேர்வு செய்வதும் அசோக் செல்வனின் அக்கா தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகியாக ஸ்டார் படத்தில் நடித்த நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.





