தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு பிறகு தமிழக மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்ற நடிகராக வலம் வந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பாட்ஷா படம் வெளியான போதே ரஜினி சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்களும் தமிழக மக்களில் பெரும்பான்மையோரும் எதிர்பார்த்தனர்.
கடந்த 2021ம் ஆண்டில் அரசியலுக்கு வருகிறேன் என்று முதலில் அறிவித்த ரஜினிகாந்த் பிறகு தனது உடல் நலம் சரியில்லை என்றும் திமுக அதிமுக என்ற இரண்டு பணபலம் படைத்த சக்திகளுக்கு மத்தியில் ரசிகர்கள் பலத்தை மட்டுமே அரசியல் களத்தில் இறங்க முடியாது என்றும் கூறி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்து விட்டார்.
அப்படி உடல் நலம் சரியில்லை என்று சொன்ன ரஜினிகாந்த் தொடர்ந்து பேட்ட கபாலி காலா தர்பார் அண்ணாத்த ஜெயிலர் வேட்டையன் லால் சலாம் கூலி ஜெயிலர் 2 என படங்களில் இடைவெளி விடாமல் தொடர்ந்து நடித்துக்கொண்டு இருக்கிறார். இப்போது தலைவர் 173 படத்திலும் அடுத்து ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்திலும் அவர் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்த சூழலில் நேற்று தவெக ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன், ரஜினி அரசியலுக்கு விரும்பினார். ஆனால் திமுகவின் மிரட்டல்களுக்கு பயந்து வரவில்லை. இப்போது ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிக்கும் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். விஜய்க்கு உள்ள திமுகவை எதிர்க்கும் மனவலிமை ரஜினிக்கு இல்லை என்று மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.
இது தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல வைரலாகி ரஜினிக்கு ஆதரவாக பலரும் கருத்துகளை பதிவிட்டு ஆதவ் அர்ஜூன் குறித்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் வெளியிட்ட ஒரு பதிவில், உடல்நிலை சரியில்லை எனக்கூறி அரசியலுக்கு வராமல் தப்பினார். ஆனால் அதன் பிறகு பல படங்களின் நடித்தாரே? அந்த மக்கள் நலனா? என்று கேள்வியும் எழுப்பினார்.
இந்த பதிவில் ப்ளூ சட்டை மாறன், ரஜினி அரசியலுக்கு வராமல் இருந்ததை நியாயப்படுத்தி பேசும் சிலரது கருத்தை கிண்டலாக விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவு இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது, சிலர் ப்ளு சட்டை மாறனின் கருத்தை ஆதரித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். உடல் நலம் இல்லை என்று கூறி அரசியலுக்கு வர முடியாது என்றால் பின்னர் தொடர்ந்து படங்களில் ரஜினிகாந்த் எப்படி நடித்து வருகிறார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தால் கடும் விமர்சனங்களை ரஜினி இப்போது சந்தித்து வருகிறார்.





