நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு நடிகர் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சொந்தமாக தயாரிக்கும் தலைவர் 173 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சாய்பல்லவி ஷோபனா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
இந்த படத்தை இயக்க முதலில் கமிட் ஆனவர் இயக்குனர் சுந்தர் சி தான். ஆனால் அவர் திடீரென படத்தை விட்டு விலகியதால் அதன்பிறகு டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இந்த படத்தை இயக்க கமிட் செய்யப்பட்டார். மிக விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்குவதாக இருந்தது.
ஆனால் இப்போது தலைவர் 173 படத்தில் இருந்து இயக்குனர் சிபி சக்ரவர்த்தியும் விலகி விட்டார். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இந்த படத்தை இனி இயக்கப் போவது ஓ மை கடவுளே மற்றும் டிராகன் படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து தான் என்பதும் உறுதியாகி உள்ளது. இவர் ஏற்கனவே ரஜினியிடம் கூறிய கதை தான் தலைவர் 173 படமாக உருவாகிறது.
அரசன் படத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் நிலையில், அதன்பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தான் சிம்பு நடிக்க உள்ளார். இப்போது ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு தேடி வந்ததால், அஸ்வத் மாரிமுத்து இதுகுறித்து சிம்புவிடம் நேரில் சென்று கூறியிருக்கிறார். அரசன் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்கள் நடக்கும் என்பதால், ரஜினி படத்தை முடிச்சுட்டு வாங்க என்று சிம்புவும் அஸ்வத் மாரிமுத்துவுக்கு பச்சைகொடி காட்டி விட்டார்.
இன்னும் இரண்டு மாதங்களில் ஸ்கிரிப்ட் பணிகளை முடித்து விட்டு ஜூன் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் தலைவர் 173 படப்பிடிப்பை துவங்க உள்ளனர். மேலும் ஜெயிலர் 2 படப்பிடிப்பிலும் இன்னும் பல காட்சிகள் விடுபட்டு இருப்பதால் அதையும் எடுத்து விடலாம் என்று ரஜினியும் கூறியிருக்கிறார்.
ஆனால் ரஜினி ரசிகர்கள்தான் படத்தின் தயாரிப்பாளர் கமல் மீது பயங்கர கடுப்பில் இருக்கின்றனர். சுந்தர் சி சிபி சக்ரவர்த்தி என 2 இயக்குனர்கள் கமிட் ஆகி வெளியேறி விட்டனர். ரஜினிக்கு ஏற்ற நல்ல கதையை தேர்வு செய்து தருவது தயாரிப்பாளர் கமலின் கடமை. இளமையான விஷயங்களை வைத்து படம் பண்ணும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 75 வயது ஹீரோ ரஜினி நடித்தால் அந்த கதை செட் ஆகுமா, வெற்றி பெறுமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.





