தமிழ் சினிமாவில் சரித்திர படங்களாக வந்து வெற்றிப் பெற்ற படங்களில் பாகுபலி முக்கியமான ஒரு படமாகும். கடந்த 2015ம் ஆண்டில் பாகுபலி முதல் பாகமும் 2017ம் ஆண்டில் பாகுபலி 2ம் பாகமும் வெளியானது. தெலுங்கு பட இயக்குனர் ராஜமெளலி இந்த படத்தை பிரமாண்டமான ஒரு படைப்பாக பான் இந்தியா படமாக தந்து ரசிகர்களை அசத்தியிருந்தார்.
மகேந்திர பாகுலி அமரேந்திர பாகுபலி என்ற 2 கேரக்டர்களில் பிரபாஸ் நாயகனாக நடித்திருந்தார். அனுஷ்கா ஷெட்டி தேவசேனை கேரக்டரிலும் ராஜமாதா சிவகாமி தேவி கேரக்டரில் ரம்யாகிருஷ்ணனும் பல்வாள் தேவன் கேரக்டரில் ராணா டகுபதி கட்டப்பா கேரக்டரில் சத்யராஜ் என ஒவ்வொரு கேரக்டரிலும் வாழ்ந்திருந்தனர்.
மேலும் தமன்னா நாசர் ரோகிணி கிஷோர் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். பிரபாஸின் கம்பீரமான நடிப்பும் அழகுபதுமையாக அனுஷ்கா ஷெட்டியும் இந்த படத்தின் 2 பாகங்களிலும் வேற லெவலில் நடித்திருந்தனர். 2 பாகங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இப்போது 2 பாகங்களும் ஒரே படமாக வெளியாகிறது.
அதாவது பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய 2 படங்களையும் ஒரே படமாக உருவாக்கி உள்ளனர். இதற்கு பாகுபலி தி ஸ்பிக் என பெயர் வைத்த நிலையில் வருகிற அக்டோபர் 31ம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. முதல் படம் 159 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 39 நிமிடங்கள், 2வது படம் 167 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 47 நிமிடங்கள். ஆகவே பாகுபலி 1 மற்றும் 2 பாகங்களும் மொத்தம் திரையில் ஓடும் நேரம் 5 மணி 26 நிமிடங்களாக உள்ளது.
இந்நிலையில் 2 பாகங்களும் ஒரே படமாக வெளியாகும் நிலையில் மொத்தம் 5 மணி நேரம் 26 நிமிடங்களில் 1 மணி நேரம் 35 நிமிடங்களை குறைத்து 3 மணி நேரம் 51 நிமிடம் படமாக வெளியிட உள்ளனர். அதாவது பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் மற்றும் பிளாஷ்பேக் காட்சிகளில் சிலவற்றை படத்தில் இருந்து நீக்கியிருக்க அதிக வாய்ப்புள்ளது.
இப்படி 3 மணி, 51 நிமிடங்கள் ஓடக்கூடிய படத்துக்கு நிச்சயம் 2 முறை இடைவேளை விட வேண்டும். அதே நேரத்தில் தினமும் 4 காட்சிகளுக்கு பதிலாக 3 காட்சிகள் மட்டுமே திரையிட முடியும். ஏற்கனவே 2 படங்களையும் பார்த்த ரசிகர்கள், மீண்டும் அதே படங்களை ஒரே படமாக பார்க்க ஆர்வமாக வந்தாலும் 3 மணி நேரம் 51 நிமிடங்கள் அமர்ந்து பார்க்க முடியுமா? என்பதெல்லாம் பாகுபலி சமாளிக்க வேண்டிய பெரிய பிரச்னைகளாக இருக்கிறது.





