சமீபத்தில் தெருநாய் கடித்து ரேபிஸ் நோய் பாதிப்பு சிலருக்கு ஏற்பட்டுள்ளது. அதே போல் தெருநாய்கள் பச்சிளம் குழந்தைகளை சிறுவர் சிறுமிகளை கடித்து குதறியிருக்கின்றன. முதியவர்கள் நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர். தெருநாய்களால் தொடர்ந்து மக்கள் பாதிக்கப்படுவதால், சுப்ரீம் கோர்ட் தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க சமீபத்தில் உத்தரவிட்டது.
இதற்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் ஒரு தரப்பினர் தெருநாய்களுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். மனிதர்களை போலவே சக ஜீவராசிகளுக்கும் இந்த பூமியில் வாழ உரிமை உள்ளது. மனிதர்களுக்காக மட்டுமே இந்த பூமி படைக்கப்பட்டதல்ல என்று பேசி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக நாய்களை அடைப்பது தவறு என்றும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் டிவியில் தெருநாய்கள் பிரச்னை தொடர்பாக நீயா நானா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தெருநாய்களுக்கு ஆதரவாக ஒரு அணியும், தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஒரு அணியும் பங்கேற்று பேசியது. இதில் காமெடி நடிகர் படவா கோபி தெருநாய்களுக்கு ஆதரவான அணியில் பல கருத்துகளை முன்வைத்து பேசியிருந்தார்.
அந்த நிகழ்ச்சி நேற்று மதியம் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை பார்த்த பலரும் நடிகர் படவா கோபியின் கருத்துகளுக்கு கடும் எதிர்ப்புகளையும் கடும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். அதே போல் சீரியல் நடிகை அம்மு என்பவரின் கருத்துகளுக்கும் பெரிய எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் படவா கோபி ஒரு வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, நீங்க எல்லோரும் பார்த்தது எடிட் செய்யப்பட்ட எபிசோடு. அப்படி போடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. பொதுமக்கள் யாரும் என்னை தவறாக நினைத்து விடாதீர்கள்.
நான் பேசியது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல. என்னுடைய கருத்துக்கள் அப்படி புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்கு நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகர் படவா கோபி அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். தெருநாய்கள் பிரச்னையில் மக்கள் நலன்தான் முக்கியமே தவிர, நாய்களுக்காக பரிந்து பேசுவது மனித தன்மையற்ற செயல் என்று பலரும் விமர்சித்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.





