ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றி நடை போட்டு, வசூலை வாரி குவித்ததால் மூலை முடுக்கெங்கும் பேசப்பட்ட பிரபாஸ் பான் இந்தியா நடிகர் என்னும் அந்தஸ்தை பெற்றார்.

இதையடுத்து யானை தன் தலையில் மண்ணை போடுவதைப் போல, பிரம்மாண்ட படங்களில் மட்டும் நடிக்க முடிவெடுத்தார் பிரபாஸ். இதன் விளைவாக, 2019 ஆம் ஆண்டு சுஜித் இயக்கத்தில் சலாம் திரைப்படம் வெளியானது. அதிரடி ஆக்சன்கள் நிறைந்து இருந்ததாலும், பாகுபலி கொடுத்த தாக்கத்தினாலும் ஆசையோடு திரையரங்குகளுக்கு ஓடிய ரசிகர்கள், சலாரைப் பார்த்து சலிப்புடன் வெளியே வந்தனர்.
பாகுபலியால் புகழின் உச்சிக்கு சென்ற பிரபாஸ், முதல்முறையாக சறுக்கினார். இதன் பிறகு, அடுத்ததாக ராதே ஷ்யாம் என்னும் படத்தில் நடித்தார் பிரபாஸ். காதலை மையப்படுத்தி உருவான இந்த திரைப்படம், வெளிநாடுகளில் படமாக்கப்பட 350 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது.

மோசமான வி எஃப் எக்ஸ் காட்சிகள், அழுத்தம் இல்லாத திரைக்கதை என பல குறைபாடுகள் இருந்ததால், ராதே ஷ்யாம் வந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. இதன்பிறகு பிரபாஸ் குறித்து சர்ச்சையான விமர்சனங்கள் உருவாக, அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் ஆதி புருஷ் இருக்கும் என்று நம்பினார் நடிகர். ஆனால் பிரபாஸின் கனவுகளை தவிடு பொடியாக்கிய ஆதி புரூஸ், மிகப்பெரிய தோல்வியை கண்டது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தை, ட்ரோல் மெட்டீரியலாக கையில் எடுத்தனர் ரசிகர்கள். அதுவும் பிரபாஸ் பார்ப்பதற்கு, நாம் தமிழர் கட்சி சீமானை போல் இருப்பதாக கூறி கிண்டலடித்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு மாஸ் ஹீரோவாக கொண்டாடப்பட்ட பிரபாஸ், இந்த ஒரு படத்தின் மூலம் கேலிக் கூத்துக்கு ஆளாகி விட்டாரே என பலரும் பேச ஆரம்பித்தனர். இப்படி அடுத்தடுத்து மோசமான திரைப்படங்களைக் கொடுத்திருக்கும் பிரபாஸ், இன்னும் பான் இந்தியா ஆசையை விடாமல் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். இதில் கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் எடுக்கும், சலார் திரைப்படம் பிரபாஸுக்கு வெற்றியை கொடுக்கும் என பலரும் நம்புகின்றனர். ப்ராஜெக்ட் கே திரைப்படமும் பிரபாஸ் கைவசம் உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, சமீப நாட்களாகவே பிரபாஸ் அதிக எடையுடன் முகம் எல்லாம் சதை வைத்து காணப்படுகிறார். இந்த நிலையில் தற்போது வெளியான புகைப்படம் ஒன்றில், அவர் முடி எல்லாம் கொட்டி வழுக்கை தலையுடன் இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன அவரது ரசிகர்கள், எங்கள் தலைவனுக்கு என்ன ஆச்சு எனக் கதற ஆரம்பித்தனர்.
தொடர்ந்து இணையதளத்தில் இது குறித்து தேட, அப்போதுதான் இந்த புகைப்படம் உண்மையில்லை என்பது தெரிய வந்தது. பிரபாஸுக்கு எதிர்தரப்பு ரசிகர்கள், அவர் வழுக்கையுடன் இருப்பது போல் போட்டோஷாப் செய்து கிண்டல் அடித்துள்ளனர். இதை அறிந்த பிரபாஸ் ரசிகர்கள் கோபம் கொண்டாலும், தங்கள் தலைவனுக்கு வழுக்கை இல்லை என்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.






