நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக அடி வாங்கியது. ஆனால் வசூல் ரீதியாக மாஸ் காட்டியது. இதுவரை உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் படத்தயாரிப்பு நிறுவனம் 25ஆவது நாள் போஸ்டரை வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்திருந்தது.
இந்தப் படத்தை முடித்த விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துவருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி, அஜ்மல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் முதல் ஷெட்யூல் சென்னையிலும், இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் பாங்காக்கிலும் நடந்து முடிந்திருக்கிறது.
இதற்கிடையே விஜய் விரைவில் அரசியலுக்கு வரவிருக்கிறார் என்றும்; அதன் காரணமாக தளபதி 68க்கு பிறகு சில வருடங்கள் பிரேக் எடுத்து அரசியலுக்கான அச்சாரத்தை போடுவார் என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. அதேசமயம் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்பதுபோல்தான் அவரது சமீபத்திய செயல்பாடுகளும் இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் அளித்த ஒரு பேட்டியில், “சோறு, மோரு, இரவு நேர படிப்பகம் என எதை வேண்டுமானாலும் திறக்கட்டும். ஆனால் அதை விஜய்தான் செய்ய வேண்டும். உங்களுடைய காசில்தான் நீங்கள் உங்களின் புகழை தேட வேண்டுமே ஒழிய அடுத்தவர் காசில் தேடக்கூடாது.
விஜய் முதலமைச்சராக வேண்டும் என்றால் அவர் அவருடைய பணத்தைதான் செலவு செய்ய வேண்டும். அதில் எந்தத் தவறும் இல்லை. விஜய் இப்போதெல்லாம் எம்ஜிஆரை ஃபாலோ செய்வது போல் தெரிகிறது. ஆனால் அவருக்கு எம்ஜிஆர் ரசிகர்கள் ஓட்டு போடமாட்டார்கள். ஏன் நானேக்கூட ஒரு எம்ஜிஆர் ரசிகர்தான். விஜய் இன்னும் பக்குவப்படவில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை.
லியோ சக்சஸ் மீட்டில் அவரது பேச்சு திறமைமிக்க அரசியல்வாதி போல் இருந்தது. ஆனால் பத்திரிகையாளர்களிடம் அவர் பேசவே பயப்படுகிறார். அதேசமயம் கருணாநிதியின் சாணக்கியத்தனம் விஜய்யிடம் தெரிகிறது. விஜய் 2026ஆம் ஆண்டு அரசியலுக்கு வரமாட்டார். ஒன்றிரண்டு வருடங்கள் லேட்டாக வரலாம். ஆனால் அவர் அரசியலுக்கு வரும் ஆசையில் இருக்கிறார் என்பது மட்டும் உறுதி” என்றார்.





