தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் இங்கு அறிமுகம் கிடைத்திருக்கிறது. அதன் எதிரொலியாக வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பையும் தொடர்ந்து அவர்கள் பெற்று வருகிறார்கள். குறிப்பாக, இதில் கவினை கூறலாம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே அவர் சின்னத்திரையில் நடித்திருந்தாலும், அவருக்கு பெரிய பிளாட்ஃபார்மாக இதுதான் அமைந்தது.
தற்போது வெள்ளித்திரைக்கு ஷிப்ட் ஆகி இருக்கும் அவர், அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதேபோல் ஆரவ் உள்ளிட்ட பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, நல்ல ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இதில் தற்போது நாம் பார்க்கப் போவது பிரதீப் ஆண்டனியை பற்றிதான்.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற அருவி திரைப்படத்தில் வந்திருப்பார் பிரதீப் ஆண்டனி. அருண் பிரபு இயக்கியிருந்த அந்த திரைப்படம், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்ணின் வலியை கூறியிருக்கும். அப்படியொரு இளம்பெண் கதாபாத்திரத்திற்கு அதிதி பாலன் கத்திதமாக பொருந்தியிருப்பார். இதில் பீட்டர் எனும் வருவார் பிரதீப் ஆண்டனி. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள், படத்தில் சுவாரசியத்தை கூட்டியிருக்கும்.
இதற்கு பிறகு வாழ் எனும் திரைப்படத்தில் பிரதீப் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருப்பார். அருவி படத்தை எடுத்திருந்த அருண் பிரபுவிற்கு இது இரண்டாவது திரைப்படம். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் எடுக்கப்பட்ட வாழ் திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பின்னடைவை சந்தித்தது. பிறகு, கவினின் டாடா படத்தில் நடித்திருந்தார் பிரதீப் ஆண்டனி.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்ப்பை பெற்ற இத்திரைப்படத்தில் இரண்டாம் பாதியிலேயே அவர் வந்திருப்பார். கவினின் நெருங்கிய நண்பரான அவர், படத்தில் நகைச்சுவை செய்து கலக்கியிருப்பார். இத்திரைப்படம், பிரதீப் ஆண்டனிக்கு நல்ல ரீச் கொடுத்தது. பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் சென்றார். அதில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை அவர் சம்பாதித்தார்.
அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டபோது பலரும் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக பேசினர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்படி செய்திருக்கக்கூடாது என்றும் கூறினர். தற்போது டாடா இயக்குநர் – ஜெயம் ரவியுடன் இணையும் திரைப்படத்தில் பிரதீப் ஆண்டனியும் கமிட் ஆகி இருக்கிறார். இந்நிலையில் அவர் தனது தோழி பூஜாவை திருமணம் செய்துள்ளார். முக்கிய நண்பர்களுக்கு மட்டும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.





