தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள நடிகர் விஜய் தொடர்ந்து திமுகவையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழ்நாட்டை ஆட்சி செய்கிற திமுகவையும் மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசையும் தொடர்ந்து தனது மேடைகளில் பேசி வருகிறார். இது திமுக பாஜக கட்சியினரிடையே பலத்த கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் தவெக பொதுக்குழுவில் பேசிய நடிகர் விஜய், மத்தியில் ஆளுகின்றவர்கள் என்றால் காங்கிரஸ் ஆட்சி செய்கிறதா, தமிழ்நாட்டில் ஆட்சி செய்பவர்கள் என்றால் அதிமுகவா இருக்கிறது, இதை சொன்னால் புரிந்துக்கொள்ள முடியாதா, நரேந்திர மோடிஜி அவர்களே மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே என கலாய்த்து பேசியிருந்தார்.
மேலும் நடிகர் விஜய், திமுக குறித்து விமர்சித்து பேசுகையில், ஆட்சிக்கு வருவதற்காக காங்கிரஸ் உடன் தேர்தலில் கூட்டணி அமைத்த திமுக இப்போது பாஜகவுடன் மறைமுக கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறது. திமுகவின் சீக்ரட் ஓனர் பாஜக தான் என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டி பேசினார். இது பாஜக கட்சியினர் மத்தியில் புகைச்சலை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, நடிகர் விஜய் அரசியல் புரிதல் இல்லாமல் பேசிக்கொண்டு இருக்கிறார். உண்மையில் நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு பி டீம் போல செயல்படுகிறார். பாஜக குறித்து பேசி வரும் அவர் காங்கிரஸ் பற்றி பேசுகிறாரா, ராகுல் காந்தியை பற்றி விமர்சித்து பேசுகிறாரா என்று கூறியிருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்தே நடிகர் விஜய்க்கும் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கும் நல்ல புரிதலும் நட்பும் இருந்து வருவதாக கூறப்படுகிறது. விஜய் அரசியலுக்கு வர மறைமுக காரணமே ராகுல் தந்த அட்வைஸ்தான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் காங்கிரஸ் கட்சியை விஜய் விமர்சிக்கவே வாய்ப்பில்லை என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருமுறை நடிகர் விஜய் டெல்லி சென்ற போது காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்தித்திருக்கிறார். அப்போது காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்த தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அப்போது ராகுல்தான், நீங்களே பெரிய ஸ்டாராக தமிழ் நாட்டில் இருக்கிறீர்கள். நீங்களே கட்சி ஆரம்பித்தால் நாளை நாம் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டில் முதல்வராக கூட வெற்றி பெறலாம் என்று கூறியதாக ஏற்கனவே தகவல்களும் வெளியாகி உள்ளன.





