இயக்குனர் விக்ரமன், தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை தந்தவர். இவரது படங்களில் நடித்த பிறகு, பல ஹீரோக்களின் திரைப்பயணம் வெற்றிப்பாதையில் அமைந்து, பெரிய நடிகராக மாற உதவியிருக்கிறது. பல நடிகர், நடிகைகளுக்கு தனது சிறந்த திரைக்கதை மூலம் அடையாளம் கொடுத்தவர் விக்ரமன் என்றால் அது மிகையல்ல.
குறிப்பாக பூவே உனக்காக, வானத்தைப் போல, சூரிய வம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், புது வசந்தம், உன்னை நினைத்து, புதிய மன்னர்கள், நான் பேச நினைப்பதெல்லாம், பிரியமான தோழி, கோகுலம் என விக்ரமன் இயக்கிய படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வெற்றிப் படங்களாகும்.
முரளி, விஜய், சரத்குமார், சூர்யா, கார்த்திக், விஜயகாந்த், விக்ரம், மாதவன், ஜெயராம் என விக்ரமன் இயக்கத்தில் நடித்த ஹீரோக்களுக்கு அடுத்த நகர்வுகளுக்கு அந்த படங்கள் முக்கிய காரணமாக இருந்தது. விக்ரமன் இயக்கிய படங்கள் பெரும்பாலும் 100 நாட்கள், 150 நாட்கள், 200 நாட்கள் என திரையில் ஓடிய படங்களாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நேற்று ரஜினி பிறந்த நாளில் இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, ஒருமுறை பிரபல வார இதழ் ஒன்றை நான் தயாரித்தேன். அதற்கான நடிகர் ரஜினிகாந்தை பேட்டி எடுக்க விரும்பினேன். அதற்காக அவரை போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர் தர்மதுரை ஷூட்டிங்குக்காக மைசூருக்கு கிளம்பிக்கொண்டு இருந்தார். நான் பிளைட்டில் போகிறேன். ஏர்ப்போர்ட் வரை இருவரும் காரில் போகலாம் என்று கூறினார்.
அப்போது என்னுடைய காரில்தான் அவர் வந்தார். அந்த காரில் ஏசி கூட கிடையாது. பழைய அம்பாசிடர் கார் அது. விக்ரமன், நீங்க சிகரட் பிடிப்பீங்கன்னா பிடிங்க, ரெண்டு பேரும் ஸ்மோக் பண்ணீட்டே பேசீட்டு போகலாம் என்று வெகு யதார்த்தமாக கூறினார். புகைபிடிக்கும் பழக்கம் எனக்கும் இருந்தது.
அப்புறம் ரெண்டு பேரும் ஸ்மோக் பண்ணிக்கிட்டு பேசிட்டே போனோம். அந்த பேட்டி அந்த வார இதழில் வந்தது. அவ்வளவு பெரிய நடிகராக ரஜினிகாந்த் இருந்துக்கொண்டு மிக எளிமையாக இருந்து, மற்றவர்களிடம் பழகும் விதத்தை அவரிடம் இருந்துதான் நான் கற்றுக்கொண்டேன். 34 ஆண்டுகளாக அவரது சிம்பிள்சிடியை நானும் பின்பற்றுகிறேன். அவருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று இயக்குனர் விக்ரமன் கூறியிருக்கிறார்.





