நடிகர் விஜய்யை ரஜினிகாந்த்துக்கு போட்டியாக நிறுத்தியிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். அதற்கு காரணம் விஜய்யின் படங்கள் தொடர்ந்து 100 கோடி ரூபாயை வசூலிப்பதுதான். ரஜினிக்கு போட்டி என்பதாலோ என்னவோ அவர் வழியை ஃபாலோ செய்யும் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர். ரஜினி அரசியல் என்ட்ரியிலிருந்து பின்வாங்கிவிட்டாலும் விஜய் பின்வாங்க கூடாது என்பதுதான் அவரது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
அதனை வலுப்படுத்தும் விதமாக விஜய் கோட்டையை பிடிப்பார், அடுத்த முதலமைச்சர் அவர்தான் போன்ற போஸ்டர்களை தொடர்ந்து அடித்துவருகின்றனர். விஜய்யும் அவை அனைத்தையும் பார்த்துக்கொண்டு அமைதியாகவே இருக்கிறார். அதுமட்டுமின்றி தனது மக்கள் இயக்கம் மூலம் பல நலத்திட்ட உதவிகளை செய்துவந்த அவர் சமீப காலமாக நேரடியாக தானே களத்தில் இறங்க ஆரம்பித்திருக்கிறார்.
அந்தவகையில் மாணவ, மாணவிகளை சந்தித்து ஊக்கத்தொகை வழங்கி சால்வை அணிவித்து அவர்கள் மத்தியில் பேசினார். அந்தப் பேச்சு அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அதேபோல் லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய அவர், நான் தளபதியாகவே இருக்கிறேன்.மக்கள் நீங்கள்தான் மன்னர்கள். நீங்கள் சொல்லும் வேலையை செய்து முடிக்கிறேன் என்று அரசியலுக்கான அச்சாரத்தை போட்டார்.
விஜய்யின் அந்தப் பேச்சை அடுத்து அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவது உறுதி என்று குரல்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. அதிலும் 2026ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் அரசியலில் குதிப்பார் அதற்கான அத்தனை பணிகளையும் அவர் செய்ய ஆரம்பித்துவிட்டார் என்றும் அவரது ரசிகர்களும், விவரமறிந்தவர்களும் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.
சூழல் இப்படி இருக்க இன்று விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து புதிய அறிவிப்பு வெளியானது. அதன்படி தமிழ்நாட்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 11 நூலகங்கள் திறக்கப்படும் என்பதுதான் அது. இது பலரிடமும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசியலுக்கு வராமலே.. அரசாங்கம் செய்ய வேண்டிய நல்ல விஷயங்களை 234 தொகுதிகளிலும் செய்து வருகிறாரா விஜய்? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அரசியலுக்கு வராமலே.. அரசாங்கம் செய்ய வேண்டிய நல்ல விஷயங்களை 234 தொகுதிகளிலும் செய்து வருகிறாரா விஜய்? pic.twitter.com/oAig8SLbDS
— Blue Sattai Maran (@tamiltalkies) November 17, 2023
விஜய் இப்போது தளபதி 68 படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு அவர் ரெஸ்ட் எடுப்பார் என்றும் அந்த கேப்பில் அரசியல் எண்ட்ரிக்கான அத்தனை பணிகளையும் அவர் செய்வார் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.





