நடிகர் விஜய் இப்போது, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தலைவராக இருக்கிறார். மேலும் அவரது நடிப்பில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்க உள்ளதாகவும் விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
இதற்கிடையே தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில், திருச்சியில் முதல் மாநில மாநாட்டை நடத்தவும் அதில், 10 லட்சம் பேர் பங்கேற்று அமரும் வகையில், மிக பிரமாண்டமான விழா பந்தல் அமைக்கவும் அவர் முடிவு செய்திருக்கிறார். கட்சியின் முக்கிய கொள்கைகள், கோட்பாடுகள், கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை மாநாட்டு விழாவில் விஜய் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டில், நடிகர் விஜய் நடிகராக இருந்த போதே, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், முதல் மூன்று இடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரை அவரது பெற்றோருடன் சென்னைக்கு வரவழைத்து, கௌரவித்தார். ரொக்கப் பரிசுகளுடன், கல்வி விருதுகளை வழங்கிய அவர், அறுசுவை விருந்தும் அவர்களுக்கு வழங்கினார்.
அதே போல் நடப்பாண்டிலும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகராக மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவராகவும் இன்று சென்னையில், கல்வி விருதுகள் வழங்கும் விழா நடந்து வருகிறது. இதில் விஜய் பங்கேற்று விருதுகளை, ரொக்கப் பரிசுகளை மாணவ, மாணவியருக்கு வழங்கி வருகிறார்.
முதல்கட்டமாக இன்று 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கும், அடுத்தக்கட்டமாக விடுபட்ட மற்ற மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு வரும் 3ம் தேதி இதே போல் விழா நடத்தி பரிசுகளும், விருதுகளும் வழங்க இருக்கிறார். காலை முதல் இந்த விழா பற்றி செய்திகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை ஒன்றை வெளியிட்டுள்ள சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், தல… மாணவர்கள் மத்தியில் விஜய் இன்னைக்கி பயங்கரமா ஸ்கோர் பண்ணீட்டு இருக்காரு. ஏதாச்சும் போட்டோவை இறக்கி விடுங்க. பழசா இருந்தாலும் பரவாயில்ல, என்று கூறியிருக்கிறார். அதாவது விஜய் பற்றி சமூக வலைதளங்களில் வந்து வைரல் ஆனாலே, அஜீத்குமாரும் ஏதேனும் ஒரு விஷயத்தை கொண்டு வந்துவிடுவார் என்பதை கலாய்த்து ப்ளு சட்டை மாறனின் இந்த பதிவு இப்போது டிரண்டிங் ஆகி வருகிறது.





