குழந்தை நட்சத்திரமாக எம்ஜிஆர் சிவாஜி படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி. எனினும் பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் மயிலு கேரக்டரில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். சப்பாணி கேரக்டரில் கமலும், பரட்டையன் கேரக்டரில் ரஜினியும் இந்த படத்தில் வாழ்ந்திருந்தனர்.
ரஜினி, கமல், ஸ்ரீதேவி என மூன்று பேருக்குமே அவர்களது திரையுலக பயணத்தில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம்தான் 16 வயதினிலே. இந்த படத்தை தொடர்ந்து தமிழில் ரஜினி, கமல் ஆகியோருக்கு பல படங்களில் ஸ்ரீதேவி ஜோடியாக நடித்திருக்கிறார். அதிலும் 1980களில் கமல், ஸ்ரீதேவி ஜோடிக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு தந்தனர்.
தமிழில் பல படங்களில் நடித்த பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிறமொழி படங்களில் நடித்த ஸ்ரீதேவி ஒரு கட்டத்தில் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு அனில்கபூருடன் சில படங்களில் நடித்தார். இந்தியிலும் ஸ்ரீதேவிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்போது அனில் கபூரின் அண்ணன் போனி கபூரை ஸ்ரீதேவி காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற 2 மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் பல படங்களில் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன், மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடிகை ஸ்ரீதேவி மர்மமான முறையில் குளியலறையில் இறந்து கிடந்தார். அவரது மறைவு இந்திய திரையுலகையே பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஸ்ரீதேவி குறித்து அவரது கணவர் போனிகபூர் கூறுகையில், நான் ஒவ்வொரு நொடியும் ஸ்ரீதேவியை மிஸ் செய்கிறேன். நான் உடல் எடையை குறைக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார். நான் அவருக்கான உடற்பயிற்சி செய்தேன். உடல் எடையை குறைக்க முயற்சித்தேன். ஸ்ரீதேவிக்கு என்னுடைய புகை பிடிக்கும் பழக்கம் சுத்தமாக பிடிக்காது.
அதனால் அவருக்காக நான் 3 முறை புகைபிடிப்பதை நிறுத்தினேன். எங்கள் திருமணத்திற்கு பிறகு நான் 12 ஆண்டுகள் புகை பிடிக்கவில்லை. அதற்கு பிறகு சில மன அழுத்தத்தால் மீண்டும் புகைபிடிக்க ஆரம்பித்தேன். மீண்டும் ஸ்ரீதேவி மறைவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே நான் புகைபிடிப்பதை நிறுத்தி விட்டேன் என்று நேர்கானல் ஒன்றில் வெளிப்படையாக போனிகபூர் கூறியிருக்கிறார்.





