நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை கூலி படம் திரைக்கு வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். அமீர்கான் நாகர்ஜூனா உபேந்திரா சத்யராஜ் சௌபின் சாகிர் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.
மாநகரம் கைதி விக்ரம் என மாஸ் ஹிட் படங்களை தந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இணைந்துள்ள முதல் படம் என்பதால் உலகம் முழுவதும் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த படம் ரூ. 1000 கோடி வசூலிக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வழக்கமான ரஜினி படம் ரிலீஸ் என்றாலே ரசிகர்களுக்கு திருவிழா தான். தீபாவளி பொங்கல் போல இதுவும் ஒரு பண்டிகை நாளாக தான் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். கபாலி பேட்ட படங்களுக்கு பிறகு கூலி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வைப் காணப்படுகிறது.
இதற்கிடையே வந்த காலா தர்பார் அண்ணாத்த வேட்டையன் போன்ற ரஜினி நடித்த படங்களை ரசிகர்கள் இந்த அளவுக்கு பெரிய அளவில் வரவேற்கவில்லை. ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்ட் செய்த லால் சலாம் படத்தை எல்லாம் ரசிகர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
இந்த சூழலில் நாளை கூலி படம் திரைக்கு வருகிறது. காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியுடன் 5 காட்சிகள் தமிழ்நாட்டில் திரையிட தமிழக அரசு அனுமதி தந்துள்ளது. கேரளா ஆந்திரா கர்நாடகாவில் காலை 6 மணிக்கு காட்சிகள் துவங்குகின்றன. யுஎஸ்சில் அதிகாலை 4 மணிக்கு படம் ரிலீஸாகிறது.
இப்போது வந்த லேட்டஸ்ட் தகவலின்படி கூலி படத்துக்கு இதுவரை டிக்கெட் முன்பதிவு மட்டுமே ரூ. 85 கோடிக்கு மேல் நடந்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாளை முதல் நாளன்று உலகம் முழுவதும் ரூ. 155 கோடி முதல் ரூ. 160 கோடி வரை வசூலாகும் என்றும் தமிழ்நாட்டில் மட்டுமே கூலி வசூல் ரூ. 30 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.





