ராமராஜன் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான “கரகாட்டக்காரன்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கனகா. அதன் பின் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த கனகா, தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் படு பிசியான நடிகையாக வலம் வந்தார்.

ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு வெளியே தலைக்காட்டாமல் வீட்டிற்குள்ளேயே அடங்கிப்போனார் கனகா. அவரை சந்திக்க பல பத்திரிக்கையாளர்கள் முயன்றனர். ஆனால் அவர் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது கனகா ஏன் வீட்டிலேயே முடங்கிப்போனார் என்பதற்கான காரணத்தை குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

கனகா அவரது தாயாரன தேவிகாவின் நிழலிலேயே வளர்ந்தவராம். கங்கை அமரனின் குடும்பத்தினரும் தேவிகாவின் குடும்பத்தினரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தார்களாம். ஒரு முறை தேவிகாவின் மகளான கனகாவை தனது திரைப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்து தேவிகாவிடம் அதனை கூறியிருக்கிறார். தேவிகாவும் ஒரு மிகப் பிரபலமான நடிகைதான் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.
கங்கை அமரன், தேவிகாவிடம், “கனகாவை என்னுடைய படத்தில் நடிக்க அனுமதியுங்கள்” என்று கேட்டாராம். அதற்கு தேவிகா, “நடிப்பெல்லாம் என்னோடே போகட்டும். அவளுக்கு அது வேண்டாம்” என்று கூறிவிட்டாராம். ஆனால் கங்கை அமரனோ, “என்னுடைய படத்தில் ராமராஜன்தான் நடிக்கப்போகிறார். கனகாவை தொட்டு நடிப்பது போன்ற காட்சிகள் இருக்காது. நீங்கள் தாராளமாக அனுமதி தரலாம்” என்று கேட்டுக்கொண்டாராம்.
அதன் பிறகுதான் “கரகாட்டக்காரன்” திரைப்படத்தில் கனகாவை நடிக்க வைக்க தேவிகா ஒப்புக்கொண்டாராம். கனகா எந்த திரைப்படத்தில் நடித்தாலும் அந்த படப்பிடிப்பில் தேவிகாவும் வந்து உட்கார்ந்துவிடுவாராம். ஒரு நாள் தேவிகா இறந்துபோக, கனகாவுக்கு கண்ணை கட்டிக் காட்டில் விட்டது போல் ஆகிவிட்டதாம். அவரை வழிகாட்ட யாருமே இல்லாதது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டுவிட்டதாம்.

இதனை தொடர்ந்து கனகாவின் மேனேஜரான ஒருவர் அவரது பையனை கனகாவிடம் அனுப்பி, அவரது கால்ஷீட்களை பார்த்துக்கொள்ள சொன்னாராம். அதே போல் கனகாவிற்காக நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து தரும் பொறுப்பையும் கொடுத்தாராம். அந்த நபர் கனகாவிற்கு உறுதுணையாக இருந்தாராம்.
ஆனால் ஒரு கட்டத்தில் அந்த நபர் கனகாவை ஒரு தலையாக காதலிக்கத் தொடங்கினாராம். ஆனால் கனகாவோ, அவர் நம்மை பாலியல் ரீதியாக அணுக முயற்சிக்கிறாரோ என்று தவறாக புரிந்துகொண்டு அவரை போலீஸில் பிடித்துக்கொடுப்பதாக கூறி மிரட்டிவிட்டாராம். உடனே பயந்து போன அந்த நபர் கனகாவை விட்டு ஓடிவிட்டாராம். அதன் பின் ஒரு நாள் அந்த நபர் தன்னை நல்ல விதமாகத்தான் பார்த்தார் என்பதை புரிந்துகொண்டாராம். ஆனால் அந்த சமயத்தில் அந்த நபர் ஒரு விபத்தில் இறந்துவிட்டாராம். இவ்வாறு தன்னை காதலித்த பையனை புரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டோமே எனவும் அவனை இழந்துவிட்டோமே எனவும் கவலையில் ஆழ்ந்த கனகா அப்படியே வீட்டிற்குள் முடங்கிப்போனாராம்.





