ரசிகர்கள் பலரின் மாபெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கடந்த 10 ஆம் தேதி “ஜெயிலர்” திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பழைய ஸ்டைலிஷான ரஜினிகாந்தை மீண்டும் திரையில் கொண்டு வந்திருக்கிறார் நெல்சன் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக படத்தில் இடம்பெற்ற டார்க் காமெடி பலரையும் ரசிக்க வைத்தது. ரஜினிகாந்த் இது போன்று டார்க் காமெடிகளில் நடித்துள்ளது மிகவும் புதிதாகவும் சிறப்பாகவும் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர். அதே போல் படத்தில் ரஜினிகாந்தும் அவரது பேரனும் இடம்பெறும் காட்சிகள் ரசிக்கும்படி இருப்பதாக கூறுகின்றனர். மேலும் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இடம்பெற்ற டிவிஸ்ட் அதிர்ச்சிகரமாக இருந்ததாகவும் கூறுகின்றனர்.
“ஜெயிலர்”திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே டிக்கெட் முன்பதிவில் அதிகளவு வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளிலும் மிகப் பெரிய ஓப்பனிங் இருந்தது.

“ஜெயிலர்” திரைப்படம் வெளிவந்து இரண்டு நாட்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் சுமார் 100 கோடி வசூலை நெருங்கி வருகிறது. ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் சூப்பர் ஸ்டார் சர்ச்சை போய்க்கொண்டிருக்கும் நிலையில் “ஜெயிலர்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ஆதலால் ரஜினி ரசிகர்கள் பலரும் ரஜினிகாந்த்தான் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று உற்சாகமாக துள்ளி குதிக்கின்றனர். இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், தனது வீடியோ ஒன்றில் பேசியபோது “ஜெயிலர்” படத்தை குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ளது.

அதாவது, “ஜெயிலர் திரைப்படம் நல்ல திரைப்படம் என்று சொல்ல முடியாது. மோசமான திரைப்படம் எனவும் சொல்ல முடியாது. படம் முழுவதையும் ரஜினிகாந்த் தோளில் சுமந்திருக்கிறார். ஆனால் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்” என்று கூறியுள்ளார். சித்ரா லட்சுமணன் கூறிய இக்கருத்து ரஜினி ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.





