சீயான் விக்ரமுக்கு கடந்த மார்ச் மாதம் வீர தீர சூரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. ஆக்சன் கதை களத்தில் அற்புதமாக காட்சிகளை எடுத்திருந்தார் இயக்குனர் அருண்குமார். அதிலும் முதல் பாதியில் சில காட்சிகள் இருக்கையின் நுனிக்கே வரவழைத்தன. ரசிகர்களிடம் ஓரளவு நல்ல விமர்சனத்தையே இந்த திரைப்படம் பெற்றது. அது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் லாபத்தை கொடுத்தது.
இந்த நிலையில் வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து தனது அடுத்த திரைப்படத்தை தேர்வு செய்வதில் சீயான் மிகவும் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. முதலாவதாக அவர் மடோன் அஸ்வின் உடன்தான் இணைவதாக அறிவிக்கப்பட்டது. மடோன் அஸ்வின் ஏற்கனவே மண்டேலா மற்றும் மாவீரன் என இரண்டு கமர்சியல் திரைப்படங்களை எடுத்தவர்.
இதில் மண்டேலா திரைப்படத்திற்காக தேசிய விருதை பெற்றவர். மாவீரன் திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தவர். இதனால் இந்த காம்போ மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இது அறிவிப்போடு நின்றுவிட்டது. அதன் பிறகு பணிகள் குறித்த அப்டேட்டுமே வெளியாகவில்லை. முழு கதையை கேட்ட பிறகு சீயான் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து, 96 மெய்யழகன் என்ற இரு காவியங்களை கொடுத்த பிரேம்குமாருடன் விக்ரம் இணைவதாக அறிவிக்கப்பட்டது. முழுக்க முழுக்க ஆக்சன் கதை களத்தில் இது எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்க முன் வந்தார். அதற்கான அறிவிப்பை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
ஆனால் இந்த திரைப்படத்தின் பணிகளும் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை. சமீபத்தில் இது குறித்து பேட்டியளித்திருந்த பிரேம்குமார், விக்ரம் படத்திற்கான திரைக்கதை முழுமை பெறவில்லை என்று மட்டும் கூறியிருந்தார். பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணா உடன் விக்ரம் இணையும் திரைப்படமும் கேள்விக்குறியில் முடிந்தது. இதே போல் பாடலாசிரியர் விஷ்ணு எடவன், விக்ரமுக்கு ஒரு கதை கூறியதாகவும் பேச்சு எழுந்தது.
இந்தப் பட்டியலில் தற்போது புதிதாக இணைந்து இருக்கிறார் ராம்குமார். விஷ்ணு விஷாலை வைத்து முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் என மாபெரும் இரண்டு வெற்றி திரைப்படங்களை கொடுத்த அவர் தற்போது, இரண்டு வானம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் அவர், விக்ரமுக்கு கதை கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த முறை சீயான் விக்ரம், ராம்குமார் உடன் இணைந்து பணிபுரிவார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.





