அந்த காலத்தில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் அதன்பிறகு ரஜினிகாந்த் கமல்ஹாசன் என நட்சத்திர ஹீரோக்களின் படங்களில் நடித்தவர் சோ ராமசாமி. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சோ ராமசாமி கூறியதாவது. எம்.ஜி.ஆருக்கு இருந்த இளகிய சுபாவத்துக்கு உதாரணமாக நான் பார்த்தவரையில் எத்தனையோ நிகழ்ச்சிகளைச் சொல்லலாம்.
வெளியூர்களில் ஷூட்டிங் நடக்கும்போது டெக்னீஷியன்கள் உட்படப் பலருக்கு போடப்படும் சாப்பாட்டை அந்த இடத்துக்குப் போய் சாப்பிட்டுப் பார்ப்பார். அவர் சம்பந்தப்பட்ட ஷூட்டிங்கில் எப்போது வேண்டுமானாலும் இப்படி அவர் சோதிப்பது நடக்கும் என்பதால் படக்குழுவினர் அனைவருக்கும் வழங்கப்படும் சாப்பாடும் தரமாகவும், சுவையாகவும் இருக்கும். அவருடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். அப்போது என்மீது விசேஷமான பரிவைக் காட்டியிருக்கிறார்.
நான் அப்போது மாலை நேரங்களில் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்ததால் நான் சம்பந்தப்பட்ட காட்சிகளை சீக்கிரமே எடுத்து அனுப்புவார். அடிமைப் பெண் படத்திற்காக ஜெய்ப்பூரில் 15 நாட்களுக்கு மேல் ஷூட்டிங் நடந்தது. நான் புறப்படுவதற்கு முன்பே அவரிடம் நான் லீகல் அட்வைஸராக இருந்த டி.டி.கே. கம்பெனியில் ஒரு வழக்கு விஷயமாக குறிப்பிட்ட நாளில் சென்னை திரும்பியாக வேண்டும். அந்த வழக்கில் வாய்தா கேட்காமல் நான் ஆஜராக வேண்டும் என்பதையும் சொல்லியிருந்தேன்.
அவரும் எப்படியாவது அதற்குள் என்னை அனுப்பி விடுவதாகச் சொல்லியிருந்தார். ஜெய்ப்பூருக்குக் கிளம்பிப் போய்விட்டோம். அதற்குப்பிறகு எம்.ஜி.ஆரிடம் நான் அதை நினைவுப்படுத்தவில்லை. ஷுட்டிங் நடந்து கொண்டிருந்தபோது எனக்குத் தாங்க முடியாத அளவுக்கு வயிற்றுவலி. துடித்துப்போய் விட்டேன். எம்.ஜி.ஆர். என்னை வந்து பார்த்தார். உங்களுக்கு உடம்பு சரியாகிற வரைக்கும் நடிக்க வேண்டாம். ரெஸ்ட் எடுங்க.
சென்னைக்குப் போக டிலே ஆகிடும்ன்னு நினைக்காதீங்க. உங்களைச் சொன்னபடி சரியா அனுப்பி வைச்சுடுவேன் என்று சொல்லிவிட்டு அவருக்காக அவருடன் வந்திருந்த டாக்டரை என்னுடன் தங்க வைத்துக் கவனித்தார். என்னுடன் வந்திருந்த நண்பர்களை அழைத்து, அவர் கூடவே இருந்து கவனிச்சுக்குங்க. அவர் எதையும் கேட்கத் தயங்குவார். நீங்க எது வேண்டுமானாலும் புரொடக்சன் மேனஜரை உடனே காண்டாக்ட் பண்ணுங்க என்று பரிவோடு என்னைப் பார்த்துக் கொண்டார்.
அன்றைக்கு நான் சென்னைக்குக் கிளம்ப வேண்டிய தினம். அதை நான் வலியுறுத்தாவிட்டாலும் நான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் அன்று மாலைக்குள் எடுத்து முடித்துவிட்டு, நான் சொன்னபடி செஞ்சுட்டேன். பார்த்தீங்களா? என்று கேட்டார். அப்படி நாம் கேட்ட உதவியை நாமே மறந்து விட்டாலும் அவர் அதை சரியான நினைவில் வைத்திருந்து சொன்ன சொல் மாறாமல் செய்து முடிப்பவர் என்று நடிகர் சோ ராமசாமி எம்ஜிஆர் குறித்து பேசியிருக்கிறார்.





