நடிகர் அஜித் தற்போது ஒரே நேரங்களில் இரண்டு திரைப்படங்களில் கவனம் செலுத்திய வருவது அவர் ரசிகர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் விடாமுயற்சியின் படப்பிடிப்பு, கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதற்கான படப்பிடிப்பு தொடங்கியது.
அஜர்பைஜான் நாட்டில் இந்த படத்தை முழுக்க முழுக்க எடுக்க, இயக்குனர் மகிழ்திருமேனி திட்டமிட்டார். அதன்படி அங்கு நடைபெற்ற சூட்டிங்கில், நடிகர்கள் அஜித்குமார் அர்ஜூன் ஆரவ் நடிகைகள் திரிஷா ரெஜினா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
அண்மையில் விடாமுயற்சியின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. இந்த இடைவேளையில், ஆதிக் ரவிச்சந்திரன் உடன் ஒரு படத்தில் ஒப்பந்தமானார் அஜித்குமார். ஏற்கனவே மார்க் ஆண்டனி என்னும் பிளாக்பஸ்டர் கிட்டை ஆதிக் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் அஜித்துடன் அவர் இணையும் திரைப்படத்திற்கு குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இதற்கான போஸ்டரில் அஜித் மூன்று கதாபாத்திரங்களில் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதனிடையே, விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் கடந்த வாரம் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக அஜித் குமார் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றிருக்கிறார். இதனை உறுதிப்படுத்திய அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா, தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தின் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, குட் பேட் அக்லி திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்த நிலையில், படத்தில் நடிக்கும் பிற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் வெளியாகவே இல்லை. இந்நிலையில், குட் பேட் அக்லியில், தான் நடிப்பதாக காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி தெரிவித்திருக்கிறார். டாக்டர், கோலமாவு கோகிலா உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் காமெடியில் கலக்கி இருப்பார். இந்நிலையில் அவர் குட் பேட் அக்லியில் இணைந்து இருப்பதால் நிச்சயம் திரையரங்குகளில் காமெடி பட்டாசை எதிர்பார்க்கலாம் என்று அஜித் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.





