எப்போதுமே திரை நட்சத்திரங்கள் மீது மக்களுக்கு அபரிமிதமான ஆர்வம் இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக திரையில் பார்த்தவர்களை நேரில் பார்க்கும் போது இன்னும் சந்தோஷம் அதிகரிக்கிறது. அந்த உற்சாகமான கணத்தை பதிவு செய்துக்கொள்ள அந்த பிரபல நடிகருடன் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க ரசிகர்கள் விரும்புகின்றனர்.
அதனால் பெரும்பாலான முன்னணி நட்சத்திர நடிகர்கள் வெளியூர் படப்பிடிப்புகளின் போது மணிக்கணக்கில் தங்களது ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரசிகர்களை அனுமதிக்கின்றனர். இப்படி ரசிகர்களை அனுமதிக்க காரணம் பல ஊர்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் இதற்காகவே அவர்கள் வந்திருப்பார்கள்.
நடிகர் விஜயகாந்த் போன்ற சில நடிகர்கள் எல்லாம் 6 மணி நேரம் 8 மணி நேரம் இப்படி ரசிகர்களுக்காகவே நேரத்தை ஒதுக்கி மணிக்கணக்கில் ரசிகர்களுக்கு புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். ஏனெனில் ரசிகர்களின் அன்பை அவர்கள் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டார்கள். அவர்களது ஆதரவை பெரிதும் மதித்தார்கள். ஆனால் இப்போது பலரும் அப்படியல்ல.
சில நடிகர்களுக்கு ரசிகர்களின் கூட்டத்தை கண்டாலே அலர்ஜியாகி விடும். அதனால் பக்கத்தில் ரசிகர்கள் நெருங்க விடாதபடி பவுன்சர்களின் பாதுகாப்புடன்தான் வெளியே வருகின்றனர். நடிகர் அஜீத்குமாரும் ரசிகர்களின் நெருக்கத்தை விரும்பாதவர்தான். கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக துபாயில் இருந்து வருகிறார். அங்கு தொடர்ந்து நடந்து வரும் கார் ரேஸில் கலந்துக்கொண்டு இருக்கிறார்.
ரசிகர்களை விரும்பாத நடிகர் அஜீத்குமார் இப்போது மனநிலை மாறியிருக்கிறார். அவர் ஓட்டும் காரில் அவருடன் அமர்ந்து பயணிக்க ரசிகர்களிடம் கட்டணமாக 300 திராம் அதாவது இந்திய ரூபாயில் சுமார் 80 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. பணக்கார ரசிகர்கள் பலரும் இதை பொருட்படுத்தாமல் 300 திராம் கட்டணமாக செலுத்தி அஜீத்குமாருடன் காரில் பயணித்து செல்பி வீடியோ எடுத்தனர்.
இப்போது அஜீத்குமாருடன் நின்று ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள கட்டணமாக 30 திராம் அதாவது 800 ரூபாய் வரை கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. அஜீத்குமார் நடித்த படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்க பணம் கொடுத்து டிக்கெட் வாங்குகிறோம். இப்படி அவருடன் போட்டோ எடுக்கவும் கட்டணம் வசூலிக்கிறார்களே என ரசிகர்கள் முகம் சுளிக்கின்றனர்.





