சினிமாவில் நடித்து பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பும், புகழும் பெற்று பிரபலமாகும் நடிகர் நடிகைகள் ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வந்து விடுகின்றனர். சினிமாவில் கிடைத்த புகழ் வெளிச்சத்தை வைத்து, அரசியலிலும் பதவிகளுக்கு வந்துவிட ஆசைப்படுகின்றனர். அதில் சிலர் வெற்றி பெறுகின்றனர். பலர் தோல்வியடைகின்றனர்.
தமிழக அரசியலில் சினிமாவில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வந்து ஜெயித்தவர்கள் எம்ஜிஆர், விஜயகாந்த் மட்டும்தான். எம்ஜிஆர் ஆதரவில்தான் ஜெயலலிதா, அரசியலுக்கு வந்து பிறகு வெற்றி பெற்றார். விஜயகாந்த் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால், நிச்சயமாக தமிழக முதல்வராக அவர் இருந்திருப்பார்.
இப்போது மக்கள் செல்வாக்கு, ஆதரவுடன் அரசியலுக்கு வந்திருப்பவர் விஜய். அவருக்கான வரவேற்பு, ஆதரவு என்பது வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவுகளில் தெளிவாக தெரிந்துவிடும். எனினும் தொடர்ந்து தமிழகத்தில் திமுக, அதிமுகவை ஆட்சிகளை, வாரிசு அரசியலை விரும்பாத மக்கள், விஜய்க்கு அதிக ஆதரவு தர வாய்ப்பிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
அதே போல் சினிமாவிலும் காமெடி நடிகராக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுபவர்கள் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்க வந்துவிடுகின்றனர். கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், யோகி பாபு, சூரி, சதீஷ் வரிசையில் இப்போது காமெடி நடிகர் ரோபோ சங்கரும் இணைந்து விட்டார். அவர் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கலக்கப்போவது யாரு, ஜெயிக்கப் போவது யாரு போன்ற டிவி சேனல் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் கவனம் பெற்றவர் ரோபோ சங்கர். இவர் முன்னணி நடிகர்களின் பல குரலில் பேசி அசத்தும் திறமையாளர். வாயை மூடி பேசவும் என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். பிறகு அவர் மனைவி மகளும் கூட சில படங்களில் நடித்தார்கள். குறிப்பாக விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் அவரது மகள் நடித்திருந்தார்.
ரோபோ சங்கர் அம்பி என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை டி2 மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் பாஸர் ஜே எல்வின் படத்தை இயக்குகிறார். ரோபோ சங்கருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். இந்த படத்தில் ரமேஷ் கண்ணா கஞ்சா கருப்பு இமான் அண்ணாச்சி மோகன் வைத்யா கோவை பாபு நமோ நாராயணா மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். காமெடி கலந்த குடும்ப படமாக அம்பி படம் உருவாகி வருகிறது. காமெடி நடிகர்கள் ஹீரோவாகும் வரிசையில் இப்போது ரோபோ சங்கர் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது.





