ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பில் உருவான அமரன் படம் தீபாவளியன்று வெளியானது. மறைந்த தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனாக, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. உலகளவில் முதல் நாளில் 42.3 கோடி வசூலித்து சாதனை புரிந்தது.
அமரன் படம் குறித்து தயாரிப்பாளர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேஜர் முகுந்த் வரதராஜன் இந்த தேசத்துக்காக எதிரிகளுடன் தீரத்துடன் போரிட்டு வீரமரணம் அடைந்தவர். அன்பு தந்தையை இழந்த மகள், அருமை கணவனை இழந்த மனைவி, ஆசை மகனை பறிகொடுத்த பெற்றோர், உயிர் நட்பை பறிகொடுத்த நண்பர்கள் சிந்திய கண்ணீர் அளவீடற்றவை. மேஜர் முகுந்த் சிந்திய ரத்தத்திற்கும் அவரது அன்புக்குரியவர்கள் சிந்திய கண்ணீருக்குமான எங்களது எளிய காணிக்கைதான் அமரன்.
இது தனி ஒரு நபரின் சரிதை மட்டுமல்ல. இந்திய நிலப்பரப்பை காக்கும் ஒவ்வொரு ராணுவ வீரன் மற்றும் ஒவ்வொரு இந்திய குடும்பத்தின் கதையும்தான். ஒரு நிஜமான கதாபாத்திரத்திற்கு உயிரூட்ட போகிறோம் என்பதை உணர்ந்து தன்னை முழுதாக அர்ப்பணித்து மேஜர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் திரைப்பயணம் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. அவரது முழுமையான பங்களிப்பும், உழைப்பும் நீண்ட காலத்துக்கு ரசிகர்களால் போற்றப்படும் என்பதில் ஐயமில்லை.
மேஜர் முகுந்த் வரதராஜனின் காதல் மனைவி இந்து வர்கீஸ் இந்த தேசமே போற்றிய இரும்பு பெண்மணி. அத்தனை இழப்புகளுக்கு மத்தியில் நான் ஒரு ராணுவ வீரனின் மனைவி என்னும் பெருமிதத்தை தன் அடையாளமாக அணிந்து கொண்ட வீரமங்கை. அவரது பாத்திரமாகவே மாறி இருக்கிறார் சாய் பல்லவி. அவர் கதாநாயகியாக அமைந்தது இந்த படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. தனது இசையால் இந்த படத்திற்கு உயிரூட்டி இருக்கிறார் ஜீவி பிரகாஷ். தனது முதல் படத்துக்கு காட்டிய அக்கறையை உழைப்பை ஒவ்வொரு படத்திலும் கடைபிடிக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.
ஒரு மகத்தான மாவீரனின் சரிதையை திரைப்படமாக எடுப்பது எளிதான காரியமல்ல. விரிவான ஆய்வுகள், களப்பணிகள் செய்து தரவுகளை திரட்டி அவற்றை தொகுத்து சுவாரசியமான திரைக்கதை ஆக்கி இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. படப்பிடிப்பு நடந்த சவாலான நிலப்பகுதிகளில், எண்ணற்ற தடைகளை மீறி தன் நெஞ்சில் சுமந்த அமரன் எனும் அனலை மேஜர் முகுந்த் வரதராஜனுக்காக ஒரு சுடராக ஏற்றி இருக்கிறார்.
தன்னை தந்து மண்ணைக் காத்த தமிழ் வீரர்களுக்கான சிறந்த சமர்ப்பணமாகவும், நாம் அறியாத ராணுவ வாழ்க்கையை அவர்களின் குடும்பத்தார் செய்யும் தியாகங்களை மக்கள் அறிந்து கொள்ளக்கூடிய படமாகவும் அமரன் படம் அமைந்ததில் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமும், நானும் பெருமை கொள்கிறோம் என்று கமல்ஹாசன் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.





