இயக்குனர் பா ரஞ்சித் அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கினார். இப்போது அவரது இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த தங்கலான் படம் ரிலீஸாகி திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
பா ரஞ்சித்தை பொருத்த வரை, தனது சினிமா படங்களில் தலித்தியம் பேசும் ஒரு படைப்பாளியாக இருந்து வருகிறார். ஜாதியம் சார்ந்த அவரது படங்களின் குறியீடுகளில் பல்வேறு விமர்சனங்களும், சர்ச்சைகளும் தொடர்ந்து எழுந்து வருகின்றன. எனினும் நெகடிவ், பாசிடிவ் என்ற 2 விதமான விமர்சனங்களை கடந்து அவரது படங்கள் வெற்றி பெறுகின்றன.
கடந்த வாரத்தில் சுதந்திர தினத்தன்று வெளியான தங்கலான் படம் குறித்தும் கலவையான விமர்சனங்களே வருகின்றன. ஒரு தரப்பினர் படம் சரியில்லை என்றும், ஒரு தரப்பினர் சுமார் என்றும் கூறுகின்றனர். ஒருமுறை பார்க்கலாம் என்றும் ஒரு தரப்பினர் கூறும் நிலையில், இதுவரை 57 கோடி ரூபாய் வசூலை தங்கலான் கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி எதிர்மறை விமர்சனங்கள் இருந்தும் ஒரு படம் வசூலில் வெற்றி பெறுகிறது என்றால், அந்த படத்தை காண வேண்டும், குறிப்பாக தங்கலான் படத்தின் பா ரஞ்சித் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை அறியவும் ஒரு ரசிகர் கூட்டம் ஆவல் காட்டுகிறது. தவிர கமலுக்கு அடுத்தபடியாக நடிப்பில் உச்சம் தொடும் விக்ரம் நடிப்பை காணவும் இந்த தங்கலான் படத்தை பலரும் விரும்பி பார்க்கின்றனர்.
இந்நிலையில், இன்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பூந்தமல்லி கோர்ட் பெண் வக்கீல் பொற்கொடி என்பவர், தங்கலான் பட இயக்குனர் பா ரஞ்சித் மீது புகார் அளித்துள்ளார். அதில், தங்கலான் படத்தில் புத்த மதத்தை உயர்வாக காட்ட, வைணவ மதத்தை இழிவுபடுத்தும் விதமான காட்சிகள் இருக்கின்றன.
அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். அந்த காட்சிகளை நீக்கவில்லை என்றால் கோர்ட்டுக்கு சென்று தங்கலான் படத்துக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடுப்பேன். அந்த காட்சிகள் பலரது மனதை புண்படுத்துவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





