நடிகர் விஜய் கடந்த 1990களில் நாளைய தீர்ப்பு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அவரது அப்பா இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், தனது மகன் விஜயை டாக்டராக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் சினிமாவில் நடிக்க விஜய் விருப்பம் காட்டியதால் அவரது ஆசைப்படி தன்னுடைய இயக்கத்தில் அவரை அறிமுகம் செய்தார்.
விஜய் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு பெரிய வரவேற்பை பெறாத நிலையில், அடுத்து நடிகர் விஜயகாந்துடன் பேசி செந்தூரப்பாண்டி படத்தில் கேப்டனுக்கு தம்பியாக விஜயை நடிக்க வைத்தார். ரசிகன் தேவா என பல படங்களில் விஜய் நடித்தார். விஜய் நடித்த பூவே உனக்காக படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றுத் தந்தது.
தொடர்ந்து நல்ல கதைகளில், நல்ல கேரக்டர்களில் நடித்து நடிகர் விஜய் முன்னணி நடிகராக மாறினார். இப்படி விஜய் சினிமாவில் முன்னேற அவரது அப்பாவும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் பக்கபலமாக இருந்தார். ஆரம்பத்தில் எஸ்ஏசி கதை கேட்டு ஓகே சொன்னால்தான், அந்த படத்தில் விஜய் நடிப்பது வழக்கமாக இருந்தது.
இப்போது சினிமா வாரிசுகள் வரிசையில் நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி பீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை, வரவேற்பை பெறவில்லை. அதிலும் இந்த படத்தின் ஆரம்பத்திலேயே செய்தியாளர்களை சந்தித்த சூர்யா, என் அப்பா வேற, நான் வேற அவரை நம்பி நான் சினிமாவுக்குள் வரலே என்று பேசி பரபரப்பை கிளப்பினார்.
சமீபத்தில் பீனிக்ஸ் பட விழாவில் சுவிங்கம் மென்றபடி மேடையில் அவர் ஆட்டிட்யூட் காட்டியதும் பெரிய சர்ச்சையை கிளப்பியது. சினிமாவில் ஒரு வெற்றியை கூட பெறாத 20 வயது நிரம்பாத ஒரு நடிகரின் மகன் இப்படி ஒரு உடல்மொழியுடன் நடந்துக்கொள்வதை பலரும் இணையத்தில் பேசுபொருளாக்கி சூர்யா சேதுபதியை விமர்சித்து வருகின்றனர்.
விஜய் சேதுபதி நடிப்பில் அனுபவம் மிக்கவர். தனது மகனுக்கு அவர் சினிமா குறித்து கற்றுத் தர வேண்டும். சினிமாவில் அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நடிகர் விஜய்க்கு அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இருந்தது போல, ஒரு வழிகாட்டியாக விஜய் சேதுபதி செயல்பட வேண்டும். ஆனால் தனது மகன் விஷயத்தில் அவர் எதையுமே கண்டுக்கொள்ளாதது சூர்யாவின் சினிமா பயணத்தை கடுமையாக பாதிக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.





