தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக உயர்ந்தவர் நடிகர் சூரி. விடுதலை, கருடன், கொட்டுக்காளி என அவர் கதையின் நாயகனாக நடித்த படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இனிமேல் கதாநாயகனாக தான் தனது சினிமா பயணம் தொடரும் என நடிகர் சூரி ஏற்கனவே திட்டவட்டமாக கூறிவிட்டார்.
நடிகர் சூரி, அம்மன் ஓட்டல் என்ற பெயரில் மதுரை உள்ளிட்ட பல நகரங்களில் ஓட்டல் நடத்தி வருகிறார். அவரது அம்மா மற்றும் அவரது சகோதரர்கள் அந்த ஓட்டல்களை நிர்வாகம் செய்து வருகின்றனர். கோடிக்கணக்கில் முதலீடு செய்து சூரி அந்த ஓட்டல்களை ஆரம்பித்துள்ள நிலையில், அவரது குடும்ப உறவுகளை ஓட்டல்களை நிர்வகித்து வருகின்றன.
இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் சூரிக்கு சொந்தமான அம்மன் ஓட்டல் உள்ளது. மற்ற ஓட்டல்களை காட்டிலும் இந்த உணவகத்தில் குறைந்த விலையில் உணவுகள் விற்கப்படுகின்றன. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள், நர்ஸ்கள், டாக்டர்களும் இங்கு வந்து சாப்பிடுவதாக கூறப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு உத்தரவில், அரசு மருத்துவமனையில் தன்னார்வலர்கள் யாரும் அன்னதானம் வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அதாவது அன்னதானத்தை சில அமைப்புகள் வழங்கும் போது ஆங்காங்கு மீதமான உணவுகளை கொட்டி அசுத்தப்படுத்துகின்றனர். மேலும், கொட்டப்படும் உணவுகளை தின்ன நாய்களின் கூட்டமும் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் ஒரு கட்டத்தில், அரசு மருத்துவமனை வளாகத்தில் அம்மன் ஓட்டல் செயல்படுவதால், அவர்களது ஓட்டல் நிர்வாகம் லாபகரமாக செயல்படவே இப்படி ஒரு உத்தரவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு காரணமே நடிகர் சூரியும், அவர் நடத்தி வரும் அம்மன் ஓட்டல் நிர்வாகம்தான் என்ற குற்றச்சாட்டு எழுந்து, அது வைரலாகி வருகிறது. எங்களது வயிறறில் அடிக்கிறார் சூரி என மக்கள் புகார் கூறியதால் பரபரப்பு அதிகரித்தது.
இதுகுறித்து சூரி கூறுகையில், இந்த குற்றச்சாட்டுக்கும், அம்மன் ஓட்டல் நிர்வாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருமுறை அந்த அரசு மருத்துவமனைக்கு சென்ற என் அம்மா, அங்கு தரமான உணவு இல்லை என்று கூறினார். அப்போது ஓட்டல் நடத்திக்கொள்ள அறிவிப்பும் வெளியானதால் அங்கு அம்மன் ஓட்டல் துவங்கப்பட்டது. சேவை மனப்பான்மையோடு அன்னதானம் வழங்குவதை ஒரு போதும் எங்கள் ஓட்டல் நிர்வாகம் தடுக்காது. இந்த புகாரால் என் மனம் வேதனைப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறியிருக்கிறார்.





