சமீபத்தில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போதைப் பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களான ஸ்ரீகாந்த் கிருஷ்ணா இருவரும் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் போதைப் பொருள் விவகாரத்தில் சில முன்னணி நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்களும் சிக்குவார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து ரகசியமாக விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
வழக்கமாக பாலிவுட்டில்தான் இதுபோன்ற போதைப் பொருள் விவகாரத்தில் நடிகர்கள் சிக்குவது வழக்கம். ஆனால் இப்போது தமிழ் சினிமா நடிகர்கள் இந்த விவகாரத்தில் சிக்கியிருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா பார்ட்டிகளில் தொடர்ந்து இதுபோன்ற போதைப் பொருள் பயன்பாடு இருந்ததா என்பது குறித்தும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதுகுறித்து நடிகர் விஜய் ஆண்டனி கூறுகையில், சிகரட் புகைப்பதே போதை பழக்கம்தான். அதன்பிறகுதான் மதுபானம் பழகுகின்றனர். தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகவே போதைப் பழக்கம் இருந்து வருகிறது என்று வெளிப்படையாக கூறியிருந்தார். இன்னும் சில நடிகர்கள் இதுகுறித்து வாய் திறந்து பேசவே மறுக்கின்றனர். காரணம், அவர்கள் நடிக்கும் படங்களில் போதை தரும் பொருட்களை பயன்படுத்துவது போல அவர்கள் தொடர்ந்து நடிக்கின்றனர்.
இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, ஒரு வீடியோவில் போதைப் பொருள் கலாசாரத்தை இளைய சமுதாயத்தின் மத்தியில் விதைப்பதே இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்றவர்கள்தான். விக்ரம், கோலமாவு கோகிலா போன்ற படங்கள் போதைப் பொருளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தன. இதுபோன்ற கதைகளை கொண்ட படங்கள் இளைய சமுதாயத்தை சீரழிக்கின்றன என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இப்போது நடிகர் ரஞ்சித்தும் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். நடிகர் ரஞ்சித் கூறியதாவது, இந்த விவகாரத்தில் 2 நடிகர்கள் சிக்கியதால் இது வெளியில் தெரிகிறது. ஆனா இதை வித்தவங்க இன்னும் ஜம்முன்னு தான் இருக்காங்க. இதுமட்டும் போதை என்றால் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் சத்து டானிக்கா விக்கறாங்க? அதை வாங்கி குடித்தால் மட்டும் உடம்புக்கு நல்லதா? இதை எல்லாம் அரசாங்கம்தான் தடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.





