நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில், கடந்த 5ம் தேதி வெளியான படம் புஷ்பா 2. இந்த படம் தெலுங்கு தமிழ் இந்தி கன்னடம் பெங்காலி என பான் இந்தியா படமாக வெளியாகி வசூலில் சாதனை புரிந்து வருகிறது. இதுவரை 1500 கோடி ரூபாய்க்கு மேல் புஷ்பா 2 படம் வசூலில் சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில் புஷ்பா 2 ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாள், கடந்த 4ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் பிரீமியர் ஷோ நடந்தது. அந்த காட்சியை தனது குடும்பத்துடன் பார்க்க வந்த ரேவதி என்ற 39 வயது பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது 9 வயது மகனும் படுகாயம் அடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஐதராபாத் போலீசார், நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்தனர். பிறகு அவர் கோர்ட் உத்தரவுபடி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜூன் 25 லட்சம் ரூபாய் நிதி வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதேபோல் புஷ்பா 2 படத்தின் தயாரிப்பாளரும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரேவதி குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார்.
எனினும் போலீசாரின் அனுமதியை மீறி பிரீமியர் ஷோ பார்க்க வந்த நடிகர் அல்லு அர்ஜூன்தான், அந்த பெண்ணின் உயிரிழப்புக்கு காரணம் என்று கடந்த 13ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜாமீனில் அவர் சிறையிலிருந்து வெளியில் வந்துள்ளார். இந்த சூழலில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, நடிகர் அல்லு அர்ஜூன் போலீஸ் அனுமதியை மீறி தியேட்டருக்கு வந்தது தான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்றும் புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள காங்கிரஸ் சட்ட மேலவை உறுப்பினரான தீன்மர் மல்லன்னா, புஷ்பா 2 படத்தின் காட்சிகள் போலீசாரை இழிவுபடுத்தும் விதத்தில் இருப்பதாக ரச்சகொண்டா பகுதி காவல்துறையில் நேற்று புகார் அளித்தார். புஷ்பா 2 படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகள் காவல்துறையினரை தவறாக சித்தரித்து காட்டப்பட்டுள்ளதாக அந்த புகாரில் கூறியிருக்கிறார்.
குறிப்பாக ஐபிஎஸ் அதிகாரி இருக்கும் நீச்சல் குளத்தில் கதாநாயகன் சிறுநீர் கழிப்பது போல் காட்சி காட்டப்பட்டுள்ளது. இது காவல்துறையை அவமதிக்கும் ஒரு செயலாகும் என்று கூறி அந்த படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர்கள் மீது குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இத்தகைய காட்சிகள் மக்களுக்கு அரசு நிர்வாகம் மீது நம்பிக்கை இழக்க செய்யும் என்றும் அந்த மனுவில் அவர் கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது. மேலும் புஷ்பா 2 படத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.





