புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடித்த படங்களில் சில படங்கள் காலத்தால் அழியாத காவியமான படைப்புகளாக இருக்கின்றன. அதில் எங்க வீட்டுப்பிள்ளை அன்பே வா நாடோடி மன்னன் அடிமைப்பெண் ஆயிரத்தில் ஒருவன் படகோட்டி உலகம் சுற்றும் வாலிபன் ரகசிய போலீஸ் 115 குடியிருந்த கோயில் உள்ளிட்ட படங்களை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
இதில் நடிகர் எம்ஜிஆர் அவரே டைரக்சன் செய்து தயாரித்த படம்தான் நாடோடி மன்னன். இந்த படம் கடந்த 1958ம் ஆண்டில் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியானது. இப்போது 67 ஆண்டுகளை நாடோடி மன்னன் படம் நிறைவு செய்திருக்கிறது. இதில் நாடோடியாகவும் மன்னனாகவும் 2 வேடங்களில் எம்ஜிஆர் நடித்திருந்தார்.
இந்த படத்தின் பாதி வரை கருப்பு வெள்ளையாகவும் இடைவேளைக்கு பிறகு நடிகை சரோஜாதேவி அறிமுகமாகும் காட்சியில் மல்டி கலர் படமாகவும் மாறியிருந்தது. இந்த படத்தில்தான் இடம்பெற்ற தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாடல் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற பாடலாக இருந்தது.
சொன்னாலும் புரியாது, மண் ஆளும் வித்தைகள் என்று படத்தில் வில்லனாக வரும் நடிகர் பிஎஸ் வீரப்பா, அவரது அதிரடியான அட்டகாசமான சிரிப்புடன் பேசிய வசனத்தை அன்றைய சினிமா ரசிகர்கள் வெகுவாக ரசித்து சொல்லிக்கொண்டு இருந்தனர். இந்த படத்தில்தான் சரோஜா தேவி முதன்முறையாக எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு 26 படங்களில் எம்ஜிஆருடன் நடித்திருந்தார்.
நாடோடி மன்னன் படத்தை நடிகர் எம்ஜிஆரே டைரக்சன் செய்தது மட்டுமின்றி அவரே அந்த படத்தை தயாரிக்கவும் செய்தார். இதுகுறித்து சிலர் எம்ஜிஆருக்கு அட்வைஸ் செய்த போது, இந்த படத்தை நானே தயாரிக்கிறேன். இந்த படம் வெற்றி பெற்றால், சினிமாவில் மன்னனாக வலம் வருவேன். இல்லை என்றால் நாடோடியாக மாறிவிடுகிறேன் என்றும் உறுதியாக கூறியிருக்கிறார்.
ஆனால் நாடோடி மன்னன் படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. ரூ. 18 லட்சம் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரூ. 1கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. நாடோடி மன்னன் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடினர். இந்த படத்தில் வரும் சில வசனங்கள், எம்ஜிஆரின் எதிர்கால அரசியலுக்கு வித்திடும்படியாகவும் இருந்தன. இந்த படம் தமிழ் சினிமாவிலும் எம்ஜிஆருக்கும் திருப்புமுனை படமாக அமைந்தது.





