கடந்த 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகள் அதிமுக – திமுக மீது ஏற்பட்ட அதிருப்தியால் மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்த்த தமிழக மக்கள் அரசியல் களத்துக்கு வந்த நடிகர் விஜயின் தவெக கட்சிக்கு விசில் சின்னத்தில் வாக்களித்து 108 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்தனர். ஆனால் இது மக்களுக்கான ஆட்சியாக இல்லாமல் மக்களை சோதிக்கும் ஒரு ஆட்சியாக 120 நாட்களில் மாறியிருக்கிறது.
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் பலரும் கொந்தளித்து பேசி வருகின்றனர். அவர்கள் கூறியதாவது, தவெக கட்சியை துவங்கிய ஆரம்ப காலத்தில் விஜய் திமுகவை தனது அரசியல் எதிரி என்றும் பாஜகவை தனது கொள்கை எதிரி என்றும் கூறினார். ஆனால் தேர்தல் பிரசாரங்களிலும் சரி சட்டசபையிலும் சரி இப்போதும் திமுகவை மட்டும்தான் அவர் வசைபாடி கொண்டு இருக்கிறார். பாஜக குறித்து எந்தவிதமான எதிர்கருத்தையும் அவர் பேசுவது இல்லை.
மக்களுக்காக தான் வருகிறேன். மக்களுக்கு நன்றி கடன் செலுத்தவே வருகிறேன் என்று மேடைகளில் விஜய் பேசினார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு பார்த்தால் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளாக இருந்தவர்கள் தான் இப்போது எம்எல்ஏக்களாக மந்திரிகளாக மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். அவர்கள்தான் பதவி சுகத்தை அனுபவிக்கின்றனர். வசதியாக வாழத் துவங்கியிருக்கின்றனர்.
மக்களின் பிரச்னைகளை தீர்க்க வந்தவர் போல முதல்வர் விஜயின் நடவடிக்கைகள் சிறிதும் இல்லை. அனைத்து எம்எல்ஏக்களும் அரசு தரப்பில் கார் வழங்குவதாக அறிவிக்கிறார். அதை பராமரிக்க உதவியாளர் உட்பட மாதம் 75 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அறிவிக்கிறார். ஆனால் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை சொன்னபடி நிறைவேற்றாமல் அதில் மக்களுக்கு ஏமாற்றத்தை தருகிறார்.
எப்படியும் இந்த 5 ஆண்டுகளில் தவெக கட்சியில் உள்ள அவரது 33 ஆண்டுகால ரசிகர் மன்ற நிர்வாகிகள், விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் எல்லாம் தேவையான அளவுக்கு சம்பாதித்து விடுவார்கள். 5 ஆண்டுகளில் லைஃப் டைம் செட்டில்மென்ட் போல, 3 தலைமுறைக்கும் சொத்து சேர்த்து விடுவார்கள். ஒருவேளை தவெக கட்சி அடுத்த முறை தேர்தலில் தோற்றாலும் தவெக கட்சியினர் சொகுசாக வாழப் போவது உறுதி.
தன்னுடைய வளர்ச்சிக்காக ரசிகர் மன்ற நிர்வாகிகளாக உழைத்தவர்களுக்கு நன்றி கடன் செலுத்தவும் அவர்களை வளமாக வாழ வைக்கவும் தான் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் நடித்து சம்பாதித்த பணத்தை எல்லாம் ரசிகர் மன்றங்களுக்கு பகிர்ந்து தர முடியாது. அதனால் ஆட்சியமைத்து அதன்மூலம் தனக்கு வேண்டிய நண்பர்கள் உறவினர்கள் பட தயாரிப்பாளர்கள் என்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை வாழ வைக்க தான் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்ற உண்மை கொஞ்சம் கொஞ்சமாக புலப்படுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் பேசத் துவங்கி விட்டனர்.





