எப்போதுமே ஒரு சில நடிகர் அல்லது நடிகைகள் ஒரே சமயத்தில் 2 அல்லது 3 படங்களில் நடிப்பது வழக்கமாக உள்ளது. அதிலும் சில முன்னணி காமெடி நடிகர்கள் ஒரே நாளில் 2 அல்லது 3 படங்களில் படப்பிடிப்புகளில் கூட கலந்துக்கொள்வார்கள். கவுண்டமணி செந்தில் வடிவேலு விவேக் போன்றவர்கள் அப்படி பல படங்களில் நடித்திருக்கின்றனர்.
ஹீரோக்கள் அப்படி ஒரே நேரத்தில் 2 படங்களில் மாறி மாறி நடிக்க முடியும். கெட்டப் சேஞ்ச் பெரிய அளவில் இல்லாத பட்சத்தில் கேரக்டருக்கு ஏற்ப உடைகளை மாற்றி அப்படி எளிதாக நடித்து விடலாம். ஆனால் இயக்குனர்கள் அப்படி ஒரே சமயத்தில் 2 படங்களை இயக்கினால் அது பெரிய குழப்பத்தில் முடியும். அந்த படங்கள் பெரிய தோல்வி படங்களாக அமையும்.
இதற்கு சரியான உதாரணமாக இயக்குனர் ஷங்கர் ஒரே சமயத்தில் இந்தியன் 2 கேம் சேஞ்சர் என்ற 2 படங்களை இயக்கினார். இந்த 2 படங்களுமே மிக மோசமான தோல்வியை சந்தித்தன. அதே போல் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மதராஸி சிக்கந்தர் என 2 படங்களை இயக்கினார். இந்த 2 படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை.
இப்போது இதே போன்ற ஒரு சிக்கல் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவுக்கும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிம்பு படத்தை இயக்க அவர் கமிட் ஆன நிலையில், ரஜினி நடிக்கும் தலைவர் 173 படத்தையும் இயக்க கமிட் ஆகியுள்ளார். சிம்பு படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம், இன்னும் என்ஓசி தராமல் சிம்பு படம் ரஜினி படம் இரண்டையும் மாறி மாறி டைரக்ட் செய்யுங்கள் என்று நெருக்கடி தந்து வருகிறது.
இதற்கிடையே ரஜினி நடிக்கும் தலைவர் 173 படத்தை விட்டு இயக்குனர் சிபி சக்ரவர்த்தி விலகியதாக கூறப்பட்டாலும், இன்னும் அவரை அந்த படத்தை தயாரிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் விலகியதாக அறிவிக்கவில்லை. தலைவர் 173 படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் ஏற்பாடு செய்த அலுவலகத்தில் தான் சிபி சக்ரவர்த்தி இன்னும் இருந்து வருகிறார்.
ரஜினியே தனது படத்தில் இருந்து சிபியை விலக்கிய பிறகும் ராஜ்கமல் நிறுவனம் அவரை வெளியேறறாமல் இன்னும் மெத்தனம் காட்டுவது ஏன் என்பதும் குழப்பமாக உள்ளது. ஒருவேளை அஸ்வத் மாரிமுத்து சிம்பு படத்தை விட்டு வர முடியாவிட்டால், சிபி சக்ரவர்த்தியே ரஜினி படத்தை இயக்கட்டும் என்று கமல் நிறுவனம் கருதுகிறதா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.





