சினிமாவில் வரும் வருமானம் போதாதென்று கலை இரவு என்ற பெயரில் கலை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி நடத்தி கோடிக்கணக்கில் இப்போது பணம் சம்பாதிப்பது சினிமாத்துறையினருக்கு கூடுதல் வருமானமாகி விட்டது. இதில் மார்க்கெட் இழந்த நடிகர், நடிகைகள் குறிப்பாக சின்னத்திரை பிரபலங்கள் அதிகமாக பங்கேற்கின்றனர்.
பல படங்களில் நடித்தவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பில்லா விட்டாலும், ஏற்கனவே கிடைத்த புகழை வைத்து மக்கள் மத்தியில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி பணம் வசூலிக்கின்றனர். ஆனால் இந்த நிகழ்ச்சிகளை முறையாக நடத்த வேண்டும். தேவையான ஏற்பாடுகளை, சரியாக செய்ய வேண்டும்.
சமீபத்தில் ஏஆர் ரகுமான் நடத்திய மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி சொதப்பியதால், ஏஆர் ரகுமானுக்கே அவப்பெயர் ஏற்பட்டது. ஆனால் அதற்கு காரணம் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களே தவிர, ஏஆர் ரகுமான் அல்ல என்பது பின்னர் தெரிய வந்தது. அதனால் இசை இரவுகள், கலை இரவுகள் நடத்துபவர்கள், ஏற்பாடுகளை பக்காவாக செய்ய வேண்டும்.
நேற்று இலங்கையில் பாடகர் ஹரிகரன் பங்கேற்ற இசை இரவு நிகழ்ச்சி நடந்தது. இதில் நிறைய பிரபல நடிகர், நடிகையர், சின்னத்திரை செலிபரட்டிகள் பங்கேற்றனர். தமன்னா, யோகிபாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மிர்ச்சி சிவா, ரம்பா, டிவி நடிகர்கள் பாலா, புகழ், சாண்டி மாஸ்டர், ஆல்யா மானசா, கலா மாஸ்டர், ரச்சிதா மகாலட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த பிரமாண்ட இசை இரவில் பங்கேற்றனர்.
இலங்கை யாழ்பாணத்தில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியில் பல பாடகர்கள் பங்கேற்று பாடினர். இடையிடையே நடிகர், நடிகைகளும் மேடையில் தோன்றி பேசினர். இதற்கிடையே பார்வையாளர்களாக வந்திருந்த இளைஞர் கூட்டம் தொடர்ந்து கூச்சலிட்டு ஆரவாரம் செய்து, நிகழ்ச்சிக்கு இடையூறு செய்துக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில், உங்கள் காலில் விழுகிறோம். நிகழ்ச்சிக்கு இடையூறு செய்யாதீர்கள், என்று கேட்டுக்கொண்டும் அவர்கள் அடங்கவில்லை.
கட்டுக்கடங்காத கூட்டத்தில், ரசிகர்கள் செய்த ரகளையால் ஒரு கட்டத்தில் கலவரம் வெடித்தது. இதையடுத்து கலைநிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நடிகை தமன்னாவின் காவாலா பாட்டு நடனத்துக்கு பிறகுதான், ரசிகர்களின் கலாட்டா எல்லை தாண்டியிருக்கிறது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி சிலருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இசை இரவு நடத்தப் போய், நொந்து போய் திரும்பியிருக்கிறது நமது கோலிவுட் வட்டாரம்.





