நடிகர்கள் கமல்ஹாசன், சியான் விக்ரம் போன்றவர்கள், அவர்கள் படத்தில் ஏற்று நடிக்கும் கேரக்டருக்கு ஏற்ப தங்களது உடல் தோற்றத்தை மாற்றிக்கொள்வர். உடல் எடையை கணிசமாக அதிகரிக்கவோ, கணிசமாக குறைக்கவோ செய்வர். அதற்காக அதிகளவில் மெனக்கெடுவர் என்பது ரசிகர்கள் அறிந்த உண்மை.
சமீபத்தில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த போது சியான் விக்ரம், நீண்ட தலைமுடி, தாடி மீசையுடன் பல மாதங்கள் காணப்பட்டார். இதற்கு காரணம் அந்த படத்தில் கரிகாலச் சோழன் கேரக்டரில் சியான் விக்ரம் நடித்திருந்தார். அந்த கேரக்டருக்காக, நீண்ட தலைமுடி வளர்த்திருந்தார்.
அதே போல், ஹேராம் படத்தில் நடித்த போது நடிகர் கமல்ஹாசன் நீண்ட நாட்கள் நீண்ட தலைமுடி, தாடி மீசையுடன் தான் காணப்பட்டார். அதற்கு காரணம் ஹே ராம் படத்தில் பல காட்சிகளில் அந்த தோற்றத்தில் தான் கமல் காணப்படுவார். பொது இடங்களில் கமல் வரும்போது அதே கெட்டப்பில்தான் காணப்பட்டார்.
இதே போல் டைரக்டர் பாலா படங்களில் நடிக்கும் பட்சத்தில் அவர் என்ன மாதிரியான கெட்டப்புகளில் இருக்க சொல்கிறாரோ, அதே தோற்றத்தில் தான் அதில் நடிக்கும் ஹீரோக்கள் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் இருக்க வேண்டும். அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை போன்ற படங்களில் நடித்த ஆர்யா, அதர்வா, சசிக்குமார் போன்றவர்கள் அதே மாதிரியான கெட்டப்புகளில் இருந்தனர்.
இந்நிலையில், சரித்திர பின்னணி கொண்ட கங்குவா படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ளார். தாய்லாந்து நாட்டில் ஒரு மாதம் முழுக்க சண்டை காட்சிகளே எடுக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இதையடுத்து, புறநானூறு படத்தில் நடிக்க நடிகர் சூர்யா ஆயத்தமாகி வருகிறார். இந்த படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார்.
புறநானூறு படத்தில் நடிக்க சூர்யா தயாரான நிலையில், திடீரென சூர்யாவை அழைத்த கங்குவா படக்குழுவினர், சூர்யா பழைய கெட்டப்பை மாற்றிவிடாதீர்கள். தாடி மீசை எல்லாம் அப்படியே இருக்கட்டும். ஏனெனில், கங்குவா படத்தில் ஏதேனும் பேட்ச்ஒர்க் சீன்கள் தேவைப்பட்டால் மீண்டும் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறி, சூர்யாவை வெறுப்பேற்றி உள்ளனர். இதற்கு காரணம் என்னவென்றால், இந்த படத்தில் நீண்ட தலைமுடி, தாடியுடன் சூர்யா நடித்திருந்தாலும், அவர் சொந்தமாக முடி வளர்க்கவில்லை. விக் முடி, டோபா தான் பயன்படுத்தி இருக்கிறார்.





