நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை நேற்று பனையூரில் உள்ள தனது தலைமை செயலக அலுவலகத்தில் அறிமுகப்படுத்தினார். அங்கு வளாகத்தில் இருந்த கொடிக்கம்பத்தில் கொடியேற்றி, தனது கட்சி பாடலையும் வெளியிட்டார். இதில் விஜயின் பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர், ஷோபா உள்ளிட்ட தவெக கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.
விஜய் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய சில மணி நேரங்களிலேயே பஞ்சாயத்துகள் ஆரம்பமாகி விட்டன. பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில், யானை எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம், இந்திய தேர்தல் ஆணையத்தில் சிக்கிம், அஸ்ஸாம் தவிர்த்து எந்த மாநில கட்சியும் தங்களது கட்சி சின்னமாக, கொடியில் சின்னமாக பயன்படுத்த கூடாது என்று விதிமுறை உள்ளது.
கடந்த ஆண்டில் இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் சட்ட திருத்தம் கொண்டு வந்தது பற்றி தெரியாததால், விஜயின் கட்சிக்கொடியில் யானைகள் உருவம் உள்ளது. உடனடியாக அவற்றை நீக்காவிட்டால் சட்டரீதியாக அதை எதிர்கொள்வோம் என பகுஜன் சமாஜ்கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிக் கொடியின் நடுவில் இருப்பது வாகை மலர் அல்ல, சங்க இலக்கியத்தில் உள்ள வாகை மலர் பச்சை, வெள்ளை நிறங்களில் இருக்கும். விஜய் கட்சிக்கொடியில் பிங்க் நிறத்தில் இருப்பது தூங்குமூஞ்சி மரப்பூ என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆக, வெற்றிக்காக சூடப்படும் வாகை மலரும் அது இல்லை என்று தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே கட்சிக்கொடி மஞ்சள், சிவப்பு நிறத்தில் இருப்பது ஸ்பெயின் நாட்டு கொடியை அப்படியே காப்பியடித்து விஜய் கட்சியின் கொடியாக வடிமைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மேலே கீழே அடர் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் கொண்டதாக விஜய் கட்சி கொடி போலவே ஸ்பெயின் நாட்டு கொடி இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக தவெக கட்சிக்கொடியில் உள்ள 2 யானைகள் உருவம், இந்திய யானைகள் அல்ல, இந்திய யானைகளுக்கு காதுகள் சிறியதாக இருக்கும். கொடியில் இருப்பது ஆப்பிரிக்க யானைகள். அவைகளுக்குதான் காதுகள் பெரிதாக இருக்கும் என்றும் தகவல் பரவி வருகிறது. கட்சிக் கொடி அறிமுகப்படுத்தியது பெரிய தவறோ என்று விஜய் கருதும் அளவுக்கு, அக்குவேர், ஆணிவேராக நெட்டிசன்கள் கொடியை அலசி ஆராய்ந்து சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர்.





