தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து சீதாராமம் டியர் காமரேட் புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார். அதிலும் புஷ்பா படத்தில் அவரது ஸ்ரீ வள்ளி கேரக்டர் ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
புஷ்பா படம் பெற்ற அபரிமிதமான வெற்றிக்கு பிறகு தமிழில் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. நடிகர் கார்த்தியுடன் சுல்தான் என்ற படத்திலும், நடிகர் விஜயுடன் வாரிசு என்ற படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால் தமிழில் அவர் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகவில்லை.
ஆனால் பாலிவுட்டில் அவர் கால் பதித்தார். நடிகர் ரன்பீர் கபூருடன் அவர் நடித்த அனிமல் படம் கடுமையான விமர்சனத்தில் சிக்கியது. மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா படுக்கையறை காட்சிகளிலும், முத்தக்காட்சிகளிலும் தாராளமாக நடித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார். மிக மோசமான ஒரு படமாக அனிமல் படம் பலத்த சர்ச்சையிலும் சிக்கியது.
இந்த சூழலில் தற்போது புஷ்பா 2 படம் வருகிற 5ம் தேதி வெளியாக உள்ளது. புஷ்பா முதல் பாகம் பெரிய வெற்றியை தந்த நிலையில், 2ம் பாகமும் அதைவிட பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் மொத்தம் 12 ஆயிரம் தியேட்டர்களில் புஷ்பா 2 படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சிகளில் படக்குழு பங்கேற்று வருகிறது.
இந்நிலையில் புஷ்பா முதல் பாகத்தில் நடித்த போது நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பளமாக ரூ. 2கோடி வாங்கியதாகவும் இப்போது புஷ்பா 2 படத்தில் நடிக்க ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியதாகவும் தகவல் பரவி வருகிறது. ஐதராபாத்தில் நடந்த பிரமோ நிகழ்ச்சியில் இதுகுறித்து ராஷ்மிகாவிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது, எனது சம்பளம் குறித்த தகவல் உண்மையில்லை. அது வதந்திதான். படத்தின் இயக்குனர் சுகுமாறன் புஷ்பா 2 இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக இருப்பதால், அவர் பிரமோ நிகழ்ச்சிக்கு வரவில்லை. அல்லு அர்ஜூனுக்கு கிடைத்தது போல் எனக்கும் இந்த படத்தில் விருது கிடைக்குமா என தெரியவில்லை. கிடைத்தால் மகிழ்ச்சிதான் என்று கூறியிருக்கிறார்.





