தமிழ் சினிமாவில் நடிகராகி, சொந்தமாக படங்கள் தயாரித்து தோல்வி படங்களை இயக்கி தொடர்ந்து தோல்வி படங்களை தந்து நொடிந்து போன பலர் இருக்கின்றனர். ஆனால் இசைஞானி இளையராஜா போன்ற மக்கள் செல்வாக்கு பெற்ற, ரசிகர்களால் கொண்டாடப்படுகிற தினமும் கோடிகளில் புரளும் ஒருவர் காப்பிரைட் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது தமிழ் சினிமா துறை சார்ந்த பலரையும் முகம் சுளிக்கவே வைக்கிறது. அவரது ரசிகர்களில் பலருக்கும் இது பிடிக்கவில்லை.
ஒரு படத்துக்கு இசையமைக்க தயாரிப்பாளரிடம் உரிய சம்பளம் வாங்கிய பிறகு, இளையராஜா அந்த இசையை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்துக்கு விற்று விடுகிறார். பிறகு அவர் அந்த இசையை பாடலை எப்படி தனக்கு மட்டுமே சொந்தம் கொண்டாடுவது எப்படி சரியாகும்?
அப்படி என்றால் அந்த பாடல் வரிகளை எழுதிய கவிஞர், பாடிய பாடகர், பாடகி இசைக்கருவிகளை இசைத்த இசைக்கலைஞர்கள், பாடல் காட்சியில் நடித்தவர்களும் தானே உரிமை கொண்டாட வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். படத்தை இயக்கிய இயக்குனரும் இதில் உரிமை கேட்கலாம் அல்லவா என்றும் கூறுகின்றனர்.
இந்த விவகாரங்களுக்கு மத்தியில் நடிகை விஜயகுமார், தனது மகள் ஜோவிகா தயாரிப்பில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை டைரக்ட் செய்து அவரே கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற ராத்திரி சிவராத்திரி தூக்கம் போச்சு என்று கமல் ரூபிணி நடித்த பாடல் காட்சியை பயன்படுத்தி இருக்கிறார்.
இதற்காக இளையராஜாவிடம் தனது மகளுடன் சென்று ஆசிர்வாதம் வாங்கி, இந்த பாடலை பயன்படுத்த அனுமதி கேட்டிருக்கிறார். அவரும் ஓகே சொல்லி இருக்கிறார். மேலும் சோனி மியூசிக் நிறுவனத்திடமும் முறைப்படி காப்பிரைட் வாங்கி தான் வனிதா விஜயகுமார் இந்த பாட்டை தனது படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்.
ஆனால், ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த இந்த படத்துக்கு செய்த விளம்பரங்களில் வனிதா விஜயகுமார், ராகதேவன் இசைஞானி இளையராஜா நல்லாசியுடன் என்று அவரது புகைப்படத்துடன் விளம்பரம் செய்திருக்கிறார். மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம் அடல்ட் கண்டென்ட் நிறைந்த ஆபாச வசனங்கள், காட்சிகள் நிறைந்த ஒரு படமாக உள்ள நிலையில், இந்த படத்துக்கு தன் பெயரை போட்டு களங்கப்படுத்தி விட்டாரே என்ற கோபத்தில் இளையராஜா, வனிதா விஜயகுமார் மீது வழக்கு தொடரும் முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.





