இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் இசை சக்கரவர்த்தியாக அவர் சாதித்த சாதனைகள் ஏராளம். குறிப்பாக 1970களில் இருந்து 2024ல் இன்று வரை தமிழ் சினிமாவில் அவர் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளும், சரித்திர சம்பவங்களும் மிக அதிகம். குறிப்பாக ஒரு இசைக் கலைஞராக அவர் இந்த தமிழ் சமுதாயத்துக்கு ஆற்றிய பங்களிப்பு என்பது மிக சாதாரணமல்ல.
தனிப்பட்ட மனிதராக அவர் மீது எவ்வளவு விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இசைஞானியாக அவரது சங்கீத பங்களிப்பு என்பது உண்மையில் பாராட்டுகளுக்கு அப்பாற்பட்டதாக தான் இருக்கிறது. சினிமா கலைத்துறையில் அவரது சிறப்பான சேவையை எத்தனை பாராட்டினாலும் தகும் என்னும் அளவுக்கு தான் அவர் தொடர்ந்து சாதித்து வருகிறார்.
இப்படிப்பட்ட மகத்துவம் நிறைந்த மனிதர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க உள்ளனர். இந்த படத்தில் இளையராஜா கேரக்டரில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் டைரக்ட் செய்கிறார்.
முதலில் இந்த படத்தின் திரைக்கதை பொறுப்பை நடிகர் கமலஹாசன் ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு இப்போது நடிகர் தனுசு திரைக்கதை எழுதுகிறார் என்று கூறப்படுகிறது. இளையராஜா வாழ்க்கையை பொருத்தவரை, அவரது முதல் படமான அன்னக்கிளி படத்துக்கு இசையமைக்க வரும் வரை ஒரு பாகமாகவும், முதல் படத்தில் இசையமைத்த பிறகு இன்று வரை அவரது வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக இந்த படம் வெளியாகிறது.
இளையராஜாவுடன் சக பயணியாக அன்று முதல் பயணித்தவர் அவரது உடன் பிறந்த சகோதரர் கங்கை அமரன்தான். இளையராஜாவின் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களும், அவரது தம்பி கங்கை அமரனுக்கு தெரியும். ஆனால் கங்கை அமரனுக்கும், இளையராஜாவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த பல ஆண்டுகளாக அவர்களுக்குள் தொடர்பு இல்லாமல் இருக்கின்றனர்.
இப்போது இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தை உருவாக்கும் போது, அதை கங்கை அமரனுடன் கலந்து ஆலோசித்து திரைக்கதையை உருவாக்கினால் பல சுவாரசியமான சம்பவங்களை, நிகழ்ந்த உண்மைகளை, பல விஷயங்களை இந்த படத்தில் சேர்த்து ரசிகர்களை பல விதங்களில் கவரும் விதமாக இந்த படத்தை உருவாக்க முடியும். ஆனால் அருண் மாதேஸ்வரனும் தனுஷூம் உதவி இயக்குனர்களும் கலந்து, ஆலோசித்து பேசி இந்த கதையை உருவாக்கினால் இது புனைவு செய்யப்பட்ட ஒரு கதையாக தான் இளையராஜா படம் இருக்குமே தவிர உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்காது என்று ரசிகர்கள் இப்போதே புலம்ப தொடங்கி விட்டனர்.





