கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நேற்று துவங்கியுள்ளது. இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய, முக்கியமான திரைப்பட விழாவாக இது நடத்தப்பட்டு வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு திரைப்பட கலைஞர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டும் நிறைய திரைக்கலைஞர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
நேற்று கோவாவில் துவங்கிய இந்த 54வது சர்வதேச திரைப்பட விழா வரும் 28ம் தேதி வரை, அதாவது 8 நாட்களுக்கு இந்த திரைப்பட விழா நடக்கிறது. இந்த 8 நாட்களில் 270 படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் சர்வதேச பிரிவில் மட்டும் 198 படங்கள் திரையிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விழாவில், ஹாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் டக்ளஸ்க்கு இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளருக்கான சத்யஜித்ரே விருது வழங்கப்பட உள்ளது. நேற்றைய துவக்க விழாவில் பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித்திற்கு, சினிமாவின் சிறந்த பங்களிப்பாளர் என்ற விருது வழங்கப்பட்டது.
துவக்க விழாவில் ஸ்ரேயா சரண், நஸ்ரத் பரூச்சா, சாந்தணு மொய்த்ரா ஆகியோரது நடனநிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. துவக்க விழாவில் ஷாகித் கபூர், வித்யாபாலன், விக்கி கவுசல், அனுபம் கெர், கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ், ஆயுஷ்மான் குரோனா, சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
கோவாவில் வரும் 28ம் தேதி வரை நடக்கும் இந்த சர்வதேச திரைப்படவிழாவில், தமிழில் வெளியான 4 படங்கள் திரையிடப்படுகின்றன. பொன்னியின் செல்வன், விடுதலை, நீல நிற சூரியன், காதல் என்பது பொதுவுடமை என்ற 4 தமிழ் படங்கள் இந்த விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கோவாவில் நடந்து வரும் இந்த திரைப்பட விழாவில், விடுதலை படத்தில் நடித்த விஜய் சேதுபதி பங்கேற்று, அங்கு திரையிடப்படும் படங்களை காண்பதில் அதிக ஆர்வமாக இருந்து வருகிறார். அதேபோல் விடுதலை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் சூரி. காமெடி நடிகராக அவரை, இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக இயக்குநர் வெற்றிமாறன் மாற்றினார். அவர் நடித்த முதல் படமே சர்வதேச திரைப்படவிழாவில் பங்கேற்பதால், அதிர்ஷ்டகார மனிதராக இருக்கிறார் என, அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.





