நடிகர் ரஜினிகாந்த் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஆரவாரமும் உற்சாகமும் அதிகரித்து விடுகிறது. ரஜினி படம் ரிலீஸ் ஆகும் நாளை திருவிழா கொண்டாட்டமாக ரசிகர்கள் மாற்றி விடுகின்றனர். வேட்டையன் படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்த கூலி படம் இன்னும் 3 நாட்களில் வருகிற 14ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் காம்போவில் உருவான பான் இந்தியா படம் என்பதால் உலகம் முழுவதும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மல்டிபில் ஸ்டார்கள் நடித்துள்ள கூலி படம் 1000 கோடி ரூபாய் வசூலை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாகவே ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் போன்ற நட்சத்திர நடிகர்களின் படங்கள் என்றாலே டிக்கெட் விலை வழக்கத்தை விட அதிகரித்து விடும். ஆனால் அதிலும் ரஜினி விஜய் படங்களை காண ரசிகர்கள் அதீத ஆர்வம் காட்டுவதால் டிக்கெட் விலை கணிசமாக உயர்ந்து விடும். அதுவும் ரசிகர் காட்சிக்கு ரூ. 500 முதல் ரூ. 1000 வரை கடந்த முறை அதிகரித்துள்ளது.
ஆனால் இப்போது கூலி படத்துக்கு ரூ. 2000 வரை டிக்கெட் கட்டணம் அதிகரித்திருப்பது ரசிகர்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி டிக்கெட் விலையை தாறுமாறாக உயர்த்தியது ரஜினி ரசிகர்களை அப்செட் ஆக செய்துள்ளது. இப்படி அநியாய விலைக்கு டிக்கெட் விலை உயர்த்தலாமா என்று ரசிகர்கள் பலரும் குமுறி வருகின்றனர்.
கூலி படத்தை காண முன்பதிவு துவங்கிய நிலையில் தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இப்போது டிக்கெட் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது. கேரளாவில் மட்டும் ஒரு மணி நேரத்தில் 1 கோடி ரூபாய் டிக்கெட் முன்பதிவு ஜரூராக நடந்திருக்கிறது. அதேபோல் மற்ற மாநிலங்களிலும் கூலி படம் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த சூழலில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆன்லைன் முன்பதிவில் சில தியேட்டர்களில் கூலி படத்தின் டிக்கெட் விலை ரூ. 2000 என்பது ரசிகர்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. சில இடைத்தரகர்கள், கூலி படம் டிக்கெட்டை ரூ. 5000 வரை பிளாக்கில் விற்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. டிக்கெட் வியாபாரம் கூட ரஜினி படம் வெளியாகும் போது சிலருக்கு பெரிய லாபத்தை தந்து விடுகிறது.





