சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது ரஜினிகாந்தை வைத்து இரண்டு திரைப்படங்களை தயாரித்து இருக்கிறது. ஒன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கூலி திரைப்படம். மற்றொன்று தற்போது நெல்சன் இயக்கத்தில் எடுக்கப்பட்டு வரும் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம். இதில் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுவிட்டது. அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதற்கு முன்பு தனது திரைப்படங்களில் போதை கஞ்சா உள்ளிட்ட பயன்பாடுகளை அதிகம் காட்டியிருப்பார் லோகேஷ் கனகராஜ். ஆனால் இந்த திரைப்படத்தில் அது இல்லை என முன்பே அவர் கூறிவிட்டார். அது மட்டுமல்ல தங்கத்தை பிரதானப்படுத்தியே இந்த திரைப்படத்தின் கதை எடுக்கப்பட்டிருப்பது அதன் அறிமுக வீடியோவில் தெரிய வந்தது.
இதற்காக விசாகப்பட்டினம் அருகே ஒரு பெரிய துறைமுகத்தை செட் போட்டு எடுத்திருக்கிறார்கள். படத்தில் நாகர்ஜுனா, சோபின் சாஹிர், உபேந்திரா உள்ளிட்ட பிற மாநில நடிகர்கள் நடித்துள்ளனர். மிக முக்கியமாக அமீர்கான் படத்தில் இடம் பெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உபேந்திராவே தெரிவித்து இருந்தார்.
ஜெய்ப்பூரில் அதற்கான காட்சிகளை படமாக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதில் ஒரே பிரேமில் ரஜினிகாந்த் நாகார்ஜுனா அமீர்கான் மற்றும் உபேந்திரா ஆகியோர் வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் சத்யராஜ் மற்றும் சுருதிஹாசன் ஆகியோரும் இருக்கிறார்கள். கூலி படத்திற்காக இசையை தரமாக கொடுத்திருக்கிறார் அனிருத்.
அது சிக்குடு பாடல் ப்ரோமோ வீடியோவிலும், அண்மையில் வெளிவந்த சூப்பர் ஸ்டார் குறித்த ஒரு பாடலிலும் நன்றாக தெரிந்தது. படத்தில் ரஜினிகாந்துக்கு தேவா என்னும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோக பூஜா ஹெக்டேவும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
அதற்கான பணிகளில் படக்குழு தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மொத்தமாக இந்த திரைப்படம் 375 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் ரஜினிக்கு மட்டும் 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் 50 கோடி ரூபாய் வாங்கி இருப்பதாக பேசுகிறார்கள். இவர்களின் இருவரது ஊதியத்தையும் சேர்த்தே 200 கோடி ரூபாய் வந்துவிட்டதா என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





