நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி வெளியான படம் ஜெயிலர். ரஜினிகாந்த் சினிமா பயணத்தில் மீண்டும் ஒரு பாட்ஷா போல இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ. 650 கோடிக்கு மேல் இந்த படம் வசூலில் சாதனை புரிந்தது.
காலா, கபாலி, பேட்ட படங்களின் வெற்றியை காட்டிலும் ஜெயிலர் படத்தின் அபார வெற்றியால், ரஜினிகாந்த் மிகவும் உற்சாகமடைந்தார். வசூல் எதிர்பார்த்ததை காட்டிலும் பன்மடங்கு அதிகரித்ததால் படத்தின் தயாரிப்பாளர் சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் ரஜினிகாந்த், அனிருத் மற்றும் படத்தின் இயக்குனர் நெல்சன் ஆகியோருக்கு சொகுசு கார்களை பரிசளித்தார்.
மேலும் ஜெயிலர் படத்தில் பணிசெய்த அனைத்து தரப்பு ஊழியர்களுக்கு 2 கிராம், 4 கிராம் என தங்க நாணயங்களை பரிசாக அள்ளி வழங்கி, அவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், ஜெயிலர் 2ம் பாகம் தயாரிக்கவும் முடிவு செய்து அதற்கான ரஜினிகாந்திடம் பேசி சம்மதிக்க வைத்தார். இயக்குனர் நெல்சனுக்கும் கணிசமான சம்பளம் பேசி, ஒரு பெரிய தொகையை அட்வான்ஸ் ஆக தந்தார்.
இதுவரை ரஜினிகாந்த் 169 படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில், அவரது 170வது படம்தான் வேட்டையன். இப்போது 171வது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதுவரை அவர் நடித்த படங்களில் 2ம் பாகம் எடுத்ததும் இல்லை, அதில் அவர் நடித்தது இல்லை.
ஆனால் கலாநிதி மாறன் கேட்டுக்கொண்டதாலும், ஜெயிலர் படத்துக்கு கிடைத்த அபாரமான வெற்றியாலும் ஜெயிலர் 2 படத்துக்கு ஒத்துக்கொண்டார். அதற்கு முக்கிய காரணம், மீண்டும் ஒரு பாட்ஷா போல, ரஜினிகாந்த் சினிமா பயணத்தில் இந்த படம் அமைந்ததுதான். குறிப்பாக அனிருத் இசை, வில்லன் நடிகர் விநாயகம் நடிப்பு, சிவராஜ்குமாரின் நடிப்பு படத்தை வேற லெவலில் கொண்டு போய் விட்டது.
கூலி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிற நிலையில், ஜெயிலர் 2 படத்துக்கான ப்ரீ புரடக்சன் பணிகளை இயக்குனர் நெல்சன் துவங்கி பரபரப்பாக இயங்கி வருகிறார். விரைவில் ஜெயிலர் 2 படத்தின் முக்கிய அறிவிப்புகள் வெளிவர இருக்கிறது. நாளை ஜெயிலர் படம் ரிலீசாகி ஓராண்டு ஆக இருப்பதால், நாளை முக்கிய அறிவிப்புகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இது ரஜினி ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.





