ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த்க்கு அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகின. இதில் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேலுடன் ரஜினிகாந்த் கை கோர்க்க, வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
ஆனால் இதுவும் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை. கலவையான விமர்சனத்தையே பெற்றது. இப்படியான சூழலில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். தனது திரைப்படம் என்றாலே அதில் போதை பொருட்களை மையப்படுத்தி கதைகளை நகர்த்தும் லோகேஷ் கனகராஜ் இந்த முறை அதனை கைவிட்டு இருக்கிறார்.
அதற்கு மாறாக தங்கக் கடத்தலை பிரதானமாகக் கொண்டு அவர் கூலி திரைப்படத்தின் கதையை எழுதி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்காக பெரிய அளவில் துறைமுகம் வேண்டும் என்பதால் அவர்கள் விசாகப்பட்டினத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அங்கு பிரம்மாண்ட செட் போட்டு படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது.
ஜெயிலர் திரைப்படத்தைப் போலவே இதிலும் பிற மாநில நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாகர்ஜுனா உபேந்திரா சோபி சாகிர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிக முக்கியமாக இந்தி திரையுலகில் மிகப்பெரிய நட்சத்திரமான அமீர்கான் இந்த திரைப்படத்தில் கேமியோ ரோலில் வருகிறார். இதற்கான படப்பிடிப்பு ஜெய்பூரில் நடைபெற்று உள்ளது.
படத்தில் ரஜினிகாந்த்திற்கு தேவா என்னும் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதுபோக சத்யராஜ் மற்றும் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் ஆகியோரும் இருக்கிறார்கள். அனிருத் இசையமைக்க, இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அது தொடர்பான கவுன்டவுன் வீடியோவும் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளிநாடுகளுக்கு விநியோகம் செய்வது தொடங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அங்குள்ள விநியோகஸ்தர்கள் மிகப்பெரிய தொகையில் இந்த திரைப்படத்தை வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கோலிவுட் திரை உலகிலேயே கூலி திரைப்படம்தான் அதிக தொகைக்கு கைமாறும் என்று சினிமா விமர்சகர்கள் உறுதியாக கூறி வருகின்றனர்.





