நடிகர் ரவிமோகன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது பெயரை ஜெயம் ரவி என்பதை ரவி மோகன் என மாற்றிக்கொண்டு இருக்கிறார். சமீபகாலமாக ரவி மோகன் நடித்த படங்கள் எதுவம் பெரிய வரவேற்பை பெறாத நிலையில் உள்ளார். இதற்கிடையே தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் நடிக்க கடந்தாண்டில் கமிட் ஆன நடிகர் ரவி மோகன் அந்த படத்தில் இன்னும் நடிக்காமல் இருக்கிறார்.
இதுகுறித்து பாபிடச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற படத்தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துளளது. அந்த தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க திட்டமிட்டப்பட்ட 2 படங்களில் நடிப்பதற்காக நடிகர் ரவி மோகனுடன் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
முதல் படத்துக்கு 15 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு 6 கோடி ரூபாய் முன்பணமாக நடிகர் ரவிமோகனுக்கு வழங்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி எங்களது நிறுவனத்தின் படத்தில் நடிக்காமல் மற்ற நிறுவனங்களின் படங்களில் நடிகர் ரவி மோகன் நடித்ததால், நாங்கள் கொடுத்த முன்பனத்தை திருப்பி கேட்டோம். இதுவரையிலும் அவர் எங்களிடம் வாங்கிய 6 கோடி ரூபாய் பணத்தை திருப்பி தரவில்லை.
ஆனால் தற்போது ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் ரவி மோகன் ஸ்டுடியோஸ் மூலமாக புதிதாக படம் ஒன்றை தயாரித்து வருகிறார். எனவே எங்களிடம் அவர் வாங்கிய 6 கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு கடந்த முறை நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞரும் நடிகர் ரவி மோகன் தரப்பில் வழக்கறிஞரும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 6 கோடிக்கான சொத்து உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் பேசிய வழக்கறிஞர், கோர்ட் பிறப்பித்த உத்தரவுப்படி நடிகர் ரவிமோகன் சொத்து உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
எனவே எங்களுக்கு ரவிமோகன் செலுத்த வேண்டிய 6 கோடி ரூபாய் பாக்கிக்காக அவரது சொத்துக்களை முடக்கும் வகையில் மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இதுதொடர்பாக மனுதாக்கல் செய்ய படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் நடிகர் ரவிமோகனின் சொத்துக்களை முடக்குமாறு தயாரிப்பு நிறுவனம் விரைவில் மனுதாக்கல் செய்ய உள்ளது.





