இயக்குனர் வ கௌதமன் இயக்கத்தில் இன்று வெளியான படம் படையாண்ட மாவீரா. இந்த படத்தில் இயக்குனர் வ கௌதமன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஏற்கனவே இவர் சில படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி பூஜிதா பொன்னாடே இளவரசு உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.
கோபி ஜெகதீஸ்வரன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திக்கிறார். ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சிஎஸ் படத்துக்கு இசையமைத்திருக்கின்றனர். பிரபல அரசியல்வாதி மறைந்த காடுவெட்டி குருவின் சுயசரிதையை தழுவி உருவான இந்தப் திரைப்படத்தை விகே புரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் படையாண்ட மாவீரா படம் இன்று வெளியான நிலையில், இந்த படத்தில் சந்தன கடத்தல் வீரப்பனின் தனித்துவமான தோற்றத்தை பயன்படுத்த தடை கோரி அவரது மனைவி முத்துலட்சுமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சத்திய மங்கலம் வனப்பகுதியில் பல ஆண்டுகள் மறைந்து வாழ்ந்தவர் வீரப்பன்.
தமிழக போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட வீரப்பனுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். தமிழக போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக பல ஆண்டுகளாக பிடிபடாமல் காட்டுக்குள் பதுங்கி இருந்த வீரப்பனை, கடந்த 2004ம் ஆண்டில் தர்மபுரி மாவட்டத்திற்குள் வேனில் வந்த போது போலீஸ் டிஜிபி விஜயகுமார் தலைமையிலான போலீஸ் படை வீரப்பனை சுட்டுக்கொன்றது. வீரப்பன் மறைந்து 21 ஆண்டுகள் கடந்துவிட்டது.
இந்நிலையில் சந்தன கடத்தல் வீரப்பனின் தனித்துவமான அடையாளங்கள், தோற்றத்தை அனுமதி பெறாமல் படையாண்ட மாவீரா படத்தில் பயன்படுத்தி உள்ளதாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். இதனால் வீரப்பனின் தனித்துவ அடையாளங்களை சினிமா மற்றும் விளம்பரங்களில் பயன்படுத்த தடை விதிக்க அவரது மனைவி முத்துலட்சுமி கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது விகே ப்ரொடக்சன்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் வருகிற 20ம் தேதிக்குள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தன கடத்தல் வீரப்பன் குறித்து மக்கள் மத்தியில் எப்போதுமே பரபரப்பாக பேசப்படுவதால் அவரது தனித்துவமான அடையாளங்களை யாரும் வணிக ரீதியாக திரைப்படங்களில், விளம்பரங்களில் பயன்படுத்த கூடாது என்பதே அவரது மனைவியின் கோரிக்கையாக உள்ளது.





