தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவராக வலம் வந்தவர் எஸ்வி சேகர். கடந்த 1980, 90களில் பல படங்களில் காமெடி ஹீரோவாக நடித்திருப்பார். அதுமட்டுமின்றி நடிகர் மற்றும் இயக்குநர் விசுவின் படங்களில் கண்டிப்பாக ஒரு கேரக்டரில் நடிகர் எஸ்வி சேகர் நடித்திருப்பார். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
அதுமட்டுமின்றி எஸ்வி சேகர், விசு, கிரேஸி மோகன், ஒய்ஜி மகேந்திரன் என பலரும் அந்த காலகட்டத்தில் சொந்தமான டிராமா ட்ரூப் வைத்து, தமிழ்நாடு முழுவதும் நாடகங்களை நடத்திக் கொண்டு இருந்தனர். அவர்கள் மேடை நாடகங்களாக அரங்கேற்றம் செய்து பலத்த வெற்றி பெற்ற நாடகங்களே, ஒரு கட்டத்துக்கு பிறகு திரைப்படங்களாக ரசிகர்களை சென்றடைந்தன.
அதுபோல் நாடகப்பிரியா என்ற பெயரில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை நடத்திய பெருமைக்குரியவர்தான் எஸ்வி சேகர். இதுதவிர, ஒலிநாடாக்களில் எஸ்வி சேகர் நாடகங்கள், கடந்த 1980 – 90களில் மிக பிரபலமாக இருக்கும். வீடுகளில், டீக்கடைகளில், பஸ்களில் எஸ்வி சேகரின் காமெடி நாடக ஒலிப்பதிவு கேசட்டுகள் ஒலித்தபடியே இருக்கும்.
இப்போதும் கூட வெளிநாடுகளில் எஸ்வி சேகர் நடத்தும் நாடகங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. சினிமாவில் காமெடி நடிகராக ரஜினி, கமல், விஜய்காந்த், விசு, மோகன், பாண்டியராஜனுடன் பல படங்களில் நடித்திருக்கிறார் எஸ்வி சேகர். சினிமாவில் நடிப்பது குறைந்து போன நிலையில் எஸ்வி சேகர் அதிமுகவிலும், அதன்பிறகு பாஜக கட்சிகளில் இருந்தார்.
இந்நிலையில், அரசியல்வாதியான எஸ்வி சேகர் அவ்வப்போது, சர்ச்சையான விஷயங்களில் தனது கருத்தை தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். ஒருமுறை தனது சமூக வலைதள பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சையான ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அது பயங்கர வைரலானது. இதுகுறித்து கோர்ட்டிலும் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கு விசாரணையில், குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணம் செய்யப்பட்டு விட்டதால், சென்னை உயர்நீதிமன்றம் எஸ்வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கியது. பிரபல நடிகரான எஸ்வி சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது தமிழ் சினிமா துறையினர் மத்தியில் பயங்கர அதிர்ச்சியை, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





