நடிகர் ஜெயம் ரவி, தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக நல்ல நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஒரு ஹீரோவுக்கான முகம் அழகு, கம்பீரமான உடல் தோற்றம், எந்த கேரக்டர் என்றாலும் ஏற்றுக்கொள்ளும் நடிப்பு திறமை என சிறந்த நடிகராக இருந்தும், சில ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.
அவர் அதிகளவில் எதிர்பார்த்த அகிலன், இறைவன் போன்ற படங்கள் மிக மோசமான பிளாப் படங்களாக அமைந்தன. பொன்னியின் செல்வன் முதல் பாகம் பேசப்பட்ட அளவுக்கு 2ம் பாகம் படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்கு காரணம், கல்கி எழுதிய நாவலின் முடிவை, படத்தின் கிளைமேக்ஸில் மணிரத்னம் மாற்றி சொதப்பியதுதான்.
எனினும் இப்போது ஜெயம் ரவி மிகுந்த எதிர்பார்ப்புடன் வெற்றிக்காக காத்திருக்கும் படம் சைரன். தமிழகம் முழுவதும் நாளை தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில் இந்த படத்தில், டபுள் ரோல் செய்துள்ள ஜெயம் ரவி முதன்முறையாக வயதான கேரக்டரில் நடிப்பது தெரிய வந்துள்ளது. இது மாஸ் ஆன கேரக்டராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஜெயம் ரவி, இப்போது காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்து வருகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா இந்த படத்தை டைரக்ட் செய்கிறார். இதில் கதாநாயகியாக நித்யாமேனன் நடிக்கிறார். அதே போல் மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடிக்கும் தக்லைப் படத்திலும் ஜெயம் ரவி நடிப்பதற்காக, கமிட் ஆகியுள்ளார்.
தற்போது சைரன் படம் டிரெய்லர் வெளிவந்த நிலையில் புது பஞ்சாயத்து ஒன்று கிளம்பியிருக்கிறது. இந்த படத்தில் ஜெயிலில் இருந்து லுங்கி கட்டிக்கொண்டு ஜெயம் ரவி வரும் சில காட்சிகளை பார்த்தால், அது கைதி படத்தில் வரும் கார்த்தி கேரக்டர் போலவே உள்ளது. கைதி படக்காட்சிகளை காப்பியடித்துதான் இந்த காட்சிகள் எடுக்கப்பட்டதா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இதுகுறித்து சைரன் படத்தின் அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் கூறுகையில், நான் கைதி படம் வெளியாகும் முன்பே, சைரன் படத்தின் கதையை எழுதி, பதிவும் செய்துவிட்டேன். சைரன் படத்தில் ஜெயம் ரவி பரோலில் வருவார். ஆனால் கைதியில் கார்த்தி விடுதலையாகி வருவார். அதனால் வித்யாசம் உளளது, என்று கூறியிருக்கிறார். சைரன் படம் வெளியானால், அதில் கைதி வருகிறாரா, இல்லையா என்பதை ரசிகர்களே சொல்லி விடுவார்கள்.





