மறைந்த இயக்குனர்கள் பாரதிராஜா கே பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம் கட்டவும் மார்பளவு உருவச்சிலைகள் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பெப்சி அமைப்பின் தலைவர் இயக்குனர் ஆர் கே செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது, மறைந்த இயக்குனர்கள் பாரதிராஜா கே பாக்யராஜ் ஆகியோருக்காக தமிழ் திரைப்பட துறையை ஒன்றிணைத்து ஒரு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தோம். நினைவஞ்சலி மாதிரி இல்லாமல் படைப்பாளிகளுக்கு ஒரு அடையாளமாக நிகழ்ச்சியை உருவாக்க முடிவு செய்தோம்.
இந்த நிகழ்ச்சியை வரும் ஆகஸ்ட் 16ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்த இருக்கிறோம். காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு தமிழக முதல்வர் விஜய்க்கு கடிதம் கொடுத்திருக்கிறோம். அதுபோல அமைச்சர் ராஜ் மகனுக்கும் கடிதம் கொடுத்து இருக்கிறோம். நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் கலந்துக்கொள்வதாக கூறி இருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் எல்லா நடிகர்களும் கலந்துக்கொள்வார்கள்.
அதுபோல் இயக்குனர் சங்கத்திலிருந்தும் எல்லா இயக்குனர்களும் கலந்து கொள்வார்கள். மற்ற மாநிலங்களில் இருந்து நடிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். நடிகர் வெங்கடேஷ் கலந்து கொள்வதாக சொல்லி இருக்கிறார். நடிகர்கள் சிரஞ்சீவி பாலகிருஷ்ணா ஆகியோருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். மத்திய அமைச்சருக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். கேரளாவில் இருந்து நடிகர் சுரேஷ்கோபி வருவதாக கூறியிருக்கிறார். மம்முட்டி மோகன்லாலுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம்.
கர்நாடகாவில் இருந்தும் கேட்டிருக்கிறோம். எல்லோருமே பாசிட்டிவாக வருவதாக கூறி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி மிக சிறப்பான நிகழ்ச்சியாக இருக்கும். தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய அடையாளமாக இருக்கும். இந்த நிகழ்ச்சியை எப்படி வடிவமைப்பது என்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது. பாரதிராஜா பாக்யராஜ் இருவரின் வாழ்க்கையை 10 நிமிடத்தில் ஒரு குறும்படமாக சிறப்பான ஒரு ஆவண படமாக இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கி வருகிறார். அதுபோல் மணிமண்டபத்தில் 2 பேருக்கும் சிலை வைக்கிறோம். அதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சி ஒரு வியாபாரமாக மாறும்போது அதில் வருகிற தொகையை பாரதிராஜா பாக்யராஜ் மணிமண்டபங்களுக்கு முன்தொகையாக வைக்க அவர்கள் குடும்பத்தாரிடம் பேசியிருக்கிறோம். பாக்யராஜூக்கு கோபிசெட்டிபாளையம் பகுதியிலும் பாரதிராஜாவுக்கு அவருடைய சொந்த இடத்திலும் மணி மண்டபம் கட்ட இருக்கிறோம். இந்த நிகழ்ச்சி மட்டும் ஓரிடத்தில் மட்டுமே நடக்கும். இதில் வருகிற வருவாயை அறக்கட்டளை நிதியாக 2 நிகழ்வுகளுக்கும் பயன்படுத்துவோம். அவர்கள் மணிமண்டபம் கட்டுவதற்கான ஆரம்ப செலவாக வைத்துக் கொள்ளச் சொல்வோம்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்கு கட்டணம் இல்லை. சினிமாவில் ராஜா மாதிரி இருந்தார்கள். கோபுரமாக உயர்ந்து நின்றார்கள். அதனால் இந்த விழாவுக்கு பெயர் ராஜகோபுரங்களுடன் நினைவு உற்சவம் என பெயர் வைத்துள்ளோம். இது இரங்கல் கூட்டம் கிடையாது. நினைவு உற்சவம். 2 பேருமே நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்கள். சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு நினைவாக உற்சாகமாக தமிழ் சினிமாவின் ஒரு அடையாளமாக இதை செய்ய இருக்கிறோம். அவர்களுக்கு கொடுக்கின்ற அடையாளம் அடுத்த நூற்றாண்டை தாண்டியும் இருக்க வேண்டும். அது போல முடிவு செய்து இருக்கிறோம் என்று பெப்சி அமைப்பின் தலைவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி கூறியிருக்கிறார்.





