தங்களது அபிமான நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும் போது முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ரசிகர்கள் அந்த படம் திரையில் ஓடும்போது ஆர்ப்பரித்து உற்சாகத்தை வெளிப்படுத்துவர். குத்தாட்டம் போடுவர். கூச்சலிடுவர். கைதட்டுவர். அங்கு இருப்பவர்களும் அதே போன்ற மனநிலையில் இருந்தால் தியேட்டர் முழுவதும் உற்சாகமும் சந்தோஷமும் கொப்பளிக்கும்.
ஆனால் அது தியேட்டர் அரங்குக்குள் நடக்கும் ஒரு விஷயமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் பொது வெளியில் ரோடுகளில் விமான நிலையம் முன்பகுதியில் இப்படி தங்கள் அபிமான நடிகரை பார்த்ததும் ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் காட்டுக்கத்தலும் கூச்சலும் வரம்பு மீறிய செயல்களும் நடிகர் விஜய்க்கு பெரிய பதட்டத்தை கவலையை ஏற்படுத்தி வருகின்றன.
சமீபத்தில் கோவையில் 2 நாட்கள் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் விஜய் பங்கேற்க வருகை தந்தார். அப்போது ரோட்டில் திரண்டிருந்த மக்களுக்காக வேனின் மீது ஏறி நின்று அவர்களை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார். அப்போது பாதுகாவலர்களை மீறி வேனின் மீது ஏறிய சில ரசிகர்கள், தொண்டர்கள் விஜயை பீதியடைய செய்தனர்.
சிலர் கையை பிடிக்க இழுக்க முயற்சிக்கின்றனர். சிலர் இடுப்பை பிடித்து இழுக்கின்றனர். சிலர் வேனின் மீது ஏறிவிட்டு இறங்க மறுக்கின்றனர். இதை எல்லாம் பார்த்து அதிர்ச்சியடைந்த விஜய், நேற்று முன்தினம் ஒரு பதிவை வெளியிட்டு இதுபோன்று ஒழுங்கீனமாக நடந்துக்கொண்டால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்றும் எச்சரித்தார்.
ஜனநாயகன் படப்பிடிப்புக்காக மதுரை வழியாக கொடைக்கானல் செல்வதற்காக நடிகர் விஜய் சென்னையில் இருந்து இன்று மதுரை விமான நிலையம் வந்தார். சென்னை விமான நிலையத்திலேயே என் காரை வேனை ரசிகர்கள் பின்தொடர வேண்டாம். பத்திரமாக அவங்கவங்க வீட்டுக்கு போங்க. பைக்கில் பின்னால் வராதீங்க என்றும் எச்சரித்தார்.
ஆனால் விஜய் பேச்சை கண்டுக்கொள்ளாமல் மதுரை விமான நிலையம் பகுதியில் ரசிகர்கள் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பரித்து கூச்சலிட்டு விஜயை கடுப்படைய செய்திருக்கின்றனர். இனி நடிகர் விஜய் எங்கு வந்தாலும் பொது இடங்களில் இதுபோன்ற அத்துமீறல்களை அனுமதிக்க கூடாது. கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்க வேண்டும். மேலும் யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியமாக வந்து செல்வதும் கூட அவருக்கு நன்மையாக இருக்கும். தேவையின்றி விமர்சனங்களில் இருந்தும் தப்பிக்க முடியும். ஏனெனில் அவரது கட்சியினரின் கண்மூடித்தனமான செயல்கள் அவருக்குதான் களங்கத்தை பதட்டத்தை ஏற்படுத்துகிறது.





